லாபத்தில் இயங்கி வரும் இரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் - இரயில்வே தொழிற்சங்கம் கோரிக்கை.

Thursday 25, July 2019, 23:51:29

இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து எஸ் எம் ஆர் யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.

SRMU சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் SRMU பொது செயலாளர் கண்ணையா கலந்து கொண்டு, தனியார் மயமாக்கலால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதனை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கண்ணையா, ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருவதாகவும், அதற்கு முன்பாக தற்போது மக்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டு உள்ள நடவடிக்கை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பாக லாபத்தில் இயங்கி வரும் ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிப்பாக ரேபேலியில் உள்ள தொழிற்சாலை மற்றும் லக்னோ முதல் டெல்லி வரை செல்லும் ரயில், சென்னை முதல் மதுரை வரை செல்லும் தேஜா ரயிலையும், சென்னை முதல் கோவை வரை செல்லும் ரயிலையும் தனியாருக்கு ஒப்படைப்பதன் மூலமாக ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்படும் குறிப்பாக மானியம் நிறுத்தப்படும் என்று தெரிவித்த அவர், இது மட்டுமல்லாமல் தனியார் மயத்தின் காரணமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முற்றிலுமாக பறிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இது தவிர ரயில்வே துறையில் நிரந்தர பணி என்பதே இல்லாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே பணிகள் வழங்கப்பட்டு குறைந்த ஊதியத்தில் பணியில் அமர்த்தும் நடவடிக்கையும் ஏற்படும் என்றும், எனவே மக்களை நேரடியாக பாதிக்கும் மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து மக்கள் தாமாக முன் வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்,

இந்த போராட்டத்திற்கு எஸ் எம் ஆர் யூ தலைமை தாங்கி முன்னெடுத்து செல்லும் என்றார். ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்திட இறுதி வரை போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz