கரூர்: குளத்து ஆக்கிரமிப்பைத் தட்டிக் கேட்ட இருவர் வெட்டிப் படுகொலை!

Monday 29, July 2019, 23:20:41

கரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலையில் இருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் படுகொலை செய்யப்பட்டவர்கள்  முதலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆண்டி மகன் ராமர் என்கிற வீரமலை என்பவரும் அவரது மகனான வாண்டு என்கிற நல்லதம்பி என்பதும் கண்டறியப்பட்டது.

சமூக ஆர்வலர்களான தந்தை மகன் இருவரும் முதலைப்பட்டியில் உள்ள குளத்தின் நாற்பது ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குளத்து ஆக்கிரப்பினை முற்றிலுமாக அகற்றும்படி உத்தரவிட்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்த நல்லதம்பியையும், அவரது தந்தை வீரமலை யையும் கொலை செய்து விட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

சம்பவ இடத்தில் இருந்து கொலையானவர்களின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் குளித்தலை போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz