கேரள நகைக்கடையில் கொள்ளையடித்த மகாராஷ்ட்ரா கொள்ளையர்கள் சேலத்தில் சிக்கினர்!

Monday 29, July 2019, 17:16:13

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வைக்கப்பட்டிருந்த  மூன்றரை கிலோ தங்க நகைகளை  கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இந்தத் துணிகரக் கொள்ளை குறித்து நகைக் கடை உரிமையாளர் பத்தனம்திட்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து விசாரணையினை மேற்கொண்ட கேரள போலீஸார் தங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொள்ளையர்களைப் பிடிக்க உதவும்படி தமிழக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் கோவை, சேலம், தர்மபுரி மாவட்டப் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். தப்பியோடிய கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக இந்த மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.

சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக வந்த  கார் ஒன்றினை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர்.

அந்தக் காரினுள் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த கணபதியாதவ், பிரசாத் யாதவ், ஆதாஷ் சார்க், நித்தின் யாதவ், தாதாசாகிப் ஆகிய கொள்ளையர்கள் இருந்ததுள்ளனர். போலீசார் சோதனை செய்வதைக் கண்டவுடன் காரில் இருந்த கொள்ளையன்  நித்தின் யாதவ் மூன்றரை கிலோ நகையுடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

தப்பியோடியவனைத் தவிர காரில் இருந்த மற்றக் கொள்ளையர்களைக் கைது செய்த காவல்துறையினர், காரை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய கொள்ளையனைத் தேடும் பணியில் போலீஸார் மாநகரம் முழுவதும் விடிய விடிய ஈடுபட்டனர்.

 தப்பியோடிய கொள்ளையன் நித்தின் யாதவ் நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் பதுங்கி இருந்துள்ளான். இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், செல்வம் மற்றும் ஹோட்டல் வைத்திருக்கும் செல்வம் ஆகியோர்  கொள்ளையனை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது, மூன்றரை கிலோ தங்க நகைகளும் கொளையனிடம் இருந்துள்ளது.

கொள்ளையனைப் பிடித்தவர்கள் அது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் கொள்ளையன் நித்தின் யாதவ்வையும் நகைகளையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

இந்த நகை கொள்ளை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.நகைக் கொள்ளையர்கள் பிடிபட்ட தகவல் கேரளா போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

நகைக் கொள்ளையனை நகைகளுடன் பிடித்து போலீசாருக்கு உதவிய பொதுமக்களுக்குப் போலீஸ் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz