சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து சேலத்தில் காங்கிரசார் போராட்டம்!

Monday 29, July 2019, 23:13:58

தமிழகத்தில் உள்ள மிக பெரிய பொதுதுறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், தனியார் மயமாக்கலை கைவிட வலியுறுத்தியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், உண்ணாவிரத போராட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே-வி-தங்கபாலு தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி, "தமிழகத்தின் அடையாளமாக இருக்கும் சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்வதை பாஜக அரசு கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள சூழலில், பொதுதுறை நிறுவனத்திற்கு பத்து ஏக்கர் நிலம் கூட கையகப்படுதிட முடியாத நிலையில், 4000 ஏக்கர் நிலத்தை பொதுதுறை நிறுவனத்திற்காக மட்டுமே சேலம் மக்கள் வழங்கி உள்ளதாகவும், இதனை தனியாருக்கு கொடுப்பது என்பதை ஏற்று கொள்ள முடியாது" என்றும் தெரிவித்தார்.

"தமிழக முதல்வர் எட்பபாடி பழனிசாமி, இந்த விஷயத்தில் பாஜகவிற்கு பயந்து கொள்ளாமல், தைரியமாக எதிர்த்து சேலம் உருக்காலையை தொடர்ந்து பொதுதுறை நிறுவனமாகவே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான நிலையங்களின் பராமரிப்புகளை தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசு முடிவு என்பது கண்டிக்கதக்கது என்றும், தொடர்ந்து இது போன்ற இந்தியாவின் சொத்துகளை தனி நபர்களுக்கு விற்பதற்கு பாஜக துடித்து கொண்டிருகிறது" என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், திமுக பொருளாளர் துரைமுருகன், வேலூர் மாவட்டத்திற்கு பல திட்டங்களை கொடுத்து உள்ளதால், மக்கள் திமுகவை வெற்றி அடைய தயாராகி உள்ளனர் என்றும், இதன் காரணமாகவே பாஜக அங்கு பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கர்நாடாகவில் பாஜக வெற்றி பெற்று இருப்பது நியாயமான வெற்றி அல்ல, சூழ்ச்சி செய்து பெற்ற கீழ் தரமான வெற்றி என்றும், இந்த வெற்றி நீடிக்காது, ஆட்சி தொடர வாய்ப்பில்லை என்றும் கருத்து தெரிவித்தார். சேலம் –சென்னை இடையிலான எட்டு வழி சாலை என்பது தேவையற்றது என்றும், தமிழக முதல்வர் தனது சுயநலத்திற்காக இந்த திட்டத்தை செயல்படுத்திட முயற்சித்து வருவதாகவும், இதனை நிறுத்திட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz