எட்டு வழிச் சாலைத் திட்டத்தினால் உயிரிழந்த விவசாயிகளுக்கு சேலம் விவசாயிகள் நினைவஞ்சலி

Monday 29, July 2019, 17:29:55

சேலம் – சென்னை இடையில் பசுமை வழி சாலை என்ற பெயரில் அமைக்கப்படும் எட்டு வழி சாலை திட்டத்திற்கு விவசாய நிலங்களும், மரங்களும் அழிக்கபடுவதாக வெளியான செய்தி கேட்டும், காவல்துறையினரின் உதவியோடு விவசாய நிலங்களை அளந்து நிலத்தை கையகப்படுத்தியதை பார்த்தும், தமிழக அரசின் தொடர் நடவடிக்கையினால் மனமுடைந்தும், கடந்த ஒரு ஆண்டில், குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் எழு பேர் உயிர் இழந்து உள்ளனர். தற்கொலை செய்து கொண்டும், மாராடைப்பினாலும் விவசாயிகள் எழு பேர் உயிர் இழந்ததை நினைவு கூறும் வகையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சேலத்தில் நேற்று நடைபெற்றது.

சேலம் மாவட்டம் பூலாவரி அருகே தங்களது குடும்பத்தோடு ஓன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து விவசாய தோட்டத்தில், உயிர் இழந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர்கள், மெழுகு தீபம் ஏற்றி தங்களது வருத்தத்தை தெரிவித்து கொண்டனர். மேலும் உயிர் இழந்தவர்களுக்காக, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, எட்டு வழி சாலை திட்டத்தினால் கடந்த ஒரு ஆண்டில் எழு பேர் உயிர் இழந்து உள்ளதாகவும், இந்த உயிரிழப்பு அதிகரிக்காமல் இருக்க தமிழக அரசு தான் உரிய பதில் அளித்திட வேண்டும் என்றும், விவசாயிகளின் கருத்தை ஏற்காமலும், அவர்களின் எதிர்ப்பை கண்டு கொள்ளாமலும், தமிழக முதல்வர் தொடர்ந்து இந்த திட்டத்தை கொண்டு வர முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

இதன் ஒரு பகுதியாக ஆளுங்கட்சியை சேர்ந்த சிலரை கட்டயப்படுத்தி அழைத்து வந்து, எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கொடுப்பதற்கு விருப்பம் உள்ளதாக மனுவை வழங்குவது போல நாடகத்தை அரங்கேற்றி உள்ளார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டினர். மேலும் 99 சதவிகிதம் பேர் எதிர்க்கும் இந்த திட்டத்தை மாற்று வழியில் கொண்டு செல்லாமல், விவசாயத்தையும் நீர் நிலைகளையும் அழித்து கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டால், உயிர் இழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் தங்களது உயிரை கொடுத்ததாவது இந்த திட்டத்தை நிறுத்திடுவோம் என்று உறுதி மொழி எடுத்து கொண்டனர்

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz