சேலத்தில் பலத்த காற்று, மழை: ஆட்டோ மீது மரம் சாய்ந்து ஓட்டுனர் பரிதாப பலி!

Tuesday 30, July 2019, 19:21:03

சேலத்தில் நேற்று  பலத்த காற்று வீசி மழையும் பெய்தது. ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பெரிய மரம் ஒன்று பலத்த காற்று காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது இந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவை ஒட்டி வந்த ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த சேலம்  பிற்பகலில் மேகமூட்டமாகக் காணப்பட்டது, இதைத் தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது.

பலத்த காற்று வீசியதின் காரணமாக சேலம் ராமகிருஷ்ணா சாலையில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் குடியிருப்புப் பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று அடியோடுமுறிந்து சாலையில் விழுந்தது.

அந்த சமயத்தில் அவ் வழியே வந்த ஒரு ஆட்டோ மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை மரத்தின் அடியில் சிக்கிக் கொண்டன. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இடர்பாடுகளில் சிக்கிக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஆட்டோவை ஒட்டி வந்த கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஸ்ரீதர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சாலையின் மீது முறிந்து விழுந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தினர் இதனால் ராமகிருஷ்ணா பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தினால் அறுந்து விழுந்த மின் கம்பிகளை மின் ஊழியர்கள் பழுது பார்த்து சரி செய்தனர்.

சேலத்தில் மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz