அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது - முத்தரசன் குற்றசாட்டு.

Tuesday 30, July 2019, 19:31:19

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், கொலை மற்றும் கொள்ளை போன்றவை அன்றாட நிகழ்வுகளாக மாறி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றசாட்டியுள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியில் துணிக்கடைக்குள் நுழைந்த இருவர், துணிக்கடை உரிமையாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான வேலு தங்கமணியை வெட்டி சாய்த்தனர். உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார். உடற்கூறு ஆய்வு முடிந்த நிலையில் அவரது உடலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், கொலை சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறி வருகின்றன என்றும் கூறினார்.

மேலும் தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான நங்கவள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் கொடுரமான முறையில் வெட்டப்பட்டு, அதற்கான ஆதாரமாக கண்காணிப்பு கேமிரா காட்சிகள் இருந்தும், குற்றவாளிகளை காவல்துறையினரால் கைது செய்ய முடிய வில்லை; அவர்கள் இருவரும் தாமாகவே நீதிமன்றத்தில் சரண் அடையும் வகையில் காவல்துறையினரின் செயல்பாடுகள் உள்ளன என்றார்.

மேலும் அவர், இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பதனை அறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்திட வேண்டும். நேற்று கூட நெல்லை, குளித்தலை உள்ளிட்ட இடங்களில் கொலை நடந்து இருப்பது மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், இது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மிகவும் அலட்சியமான பதிலை தெரிவித்து இருப்பதும், ஆணவ படுகொலை குறித்து தமிழக முதல்வர் தெரிவித்த கருத்தும் மிகவும் கண்டிக்கதக்கது என்று தெரிவித்தார்,

கொலைகளைத் தடுக்க முடியாத இவர்கள் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்? என்ற கேள்வியும் எழுப்பினார். கொலை குற்றங்களை தடுக்க இரும்பு கரம் கொண்டு செயல்படுவோம் என்று கூறுவதற்கு பதிலாக குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசுவது, மற்றும் இது போன்ற சம்பவங்கள் எந்த ஒரு காலத்திலும் நடக்காத ஓன்று என்றும் குற்றம் சாட்டினார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz