அடக்குமுறை, உரிமை பறிப்பு சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 6-ல் ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.

Wednesday 31, July 2019, 19:14:03

அடக்குமுறை, உரிமை பறிப்பு சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 6-ல் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்போவதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

மத்திய மோடி அரசாங்கம் தனது அரசியல் மற்றும் அடக்குமுறை நோக்கங்களுக்காகவும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் சட்ட விரோதமான அம்சங்களை சட்டத்திருத்தம் என்கிற பெயரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.  தேசிய புலனாய்வு சட்டம், முத்தலாக் சட்டம்,  தகவல் அறியும் உரிமைச்சட்டம், தேசிய மருத்துவகவுன்சில் சட்டம், தொழிலாளர் சட்டங்கள், அணைகள் பாதுகாப்பு சட்டம், மோட்டார் வாகன சட்டம்,  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை உருவாக்குவதையும், திருத்தங்கள் செய்வதையும் உரிய விவாதங்கள் இன்றி அவசர, அவசரமாக நிறைவேற்றியிருக்கிறது. 

இந்த சட்டத்திருத்தங்கள் அனைத்தும் தனது அரசியல் மற்றும் சித்தாந்த எதிரிகளை சட்டவிரோதமாக அடக்குவதை நியாயப்படுத்துவதற்கும், தொழிலாளர் உரிமைகள் மறுப்பு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், பொதுமருத்துவத்தை சீர்குலைப்பது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடையில்லா கொள்ளைக்கு வழி செய்வது என்கிற நோக்கத்திலிருந்தே கொண்டு வரப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் மக்கள் நலனிலிருந்து முன்வைக்கும் திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு தானடித்த மூப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தையும் ஊனமாக்கி  அனைத்துப்பகுதி மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு சட்டத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சியே.

கடந்த பல ஆண்டுகளாக மோடி அரசு மேற்கண்ட சட்டங்களை நிறைவேற்ற முயற்சித்த போது, எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளால் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்தில் அறுதிபெரும்பான்மை இருக்கிற காரணத்தால் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தானடித்த மூப்பாக மோடி அரசு மேற்கண்ட சட்டத் திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது.

பொதுவாக சட்டங்கள் நிறைவேற்றுவதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினால் நிலைக்குழுவுக்கும், தெரிவுக்குழுவுக்கும் அனுப்பிய பிறகு தான் நிறைவேற்றப்படும். ஆனால் அக்குழுக்களுக்கு அனுப்ப வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்திய போதும் அவை உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. 17வது பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பிறகு இன்னமும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக்குழுவோ, நிலைக்குழுவோ அமைக்கப்படவில்லை. இக்குழுக்கள் அமைப்பதற்கு கூட அக்கறை காட்டாமல், அதற்கு முன்னரே தானடித்த மூப்பாக சட்டங்களை திருத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த எதேச்சதிகார ஜனநாயக விரோதப்போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, இந்த அணுகுமுறையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறது. மத்திய அரசின் இந்த போக்கிற்கு எதிராக அனைத்து ஜனநாயக இயக்கங்களும், பொதுமக்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறது.
இந்த சட்டங்களிலுள்ள அரக்கத்தனத்தையும், மக்கள் விரோத கார்ப்பரேட் ஆதரவு திருத்தங்களை எதிர்த்தும், 2019 ஆகஸ்ட் 6ம் தேதி தமிழகம் முழுவதும்  மாவட்டத்தலைநகர் மற்றும் முக்கிய மையங்களில் வலுவான கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட இயக்கங்களை நடத்த வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz