சேலம் அரசு பொருட்காட்சி திறப்பு விழாவிற்கு வந்த தமிழக முதல்வரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம்

Monday 05, August 2019, 23:01:39

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு உள்ள அரசுப் பொருட்காட்சியை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று சேலம் வந்தார். அரசு பொருட்காட்சியை தமிழக முதல்வர் திறந்து வைக்க வருவதை அறிந்த எட்டு வழி சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஓன்று திரண்டனர்.

இதனை அறிந்த உளவுத் துறையினரும், காவல்துறையினரும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி களைந்து செல்லும்படிக் கூறினர். அதனை ஏற்க மறுத்த விவசாயிகள் முதல்வரை நேரில் சந்தித்து, எட்டு வழிச் சாலைக்கு நிலம் கொடுக்கத் தயாராக இல்லை என்ற மனுவை அழிப்பது என்பதில் உறுதியாக இருந்தனர்.

இதனையடுத்து நிலைமையினைச் சமாளிக்க அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அரசுப் பொருட்காட்சியைத் திறந்து வைக்க முதல்வர் விழா நடைபெறும் பகுதிக்கு வந்த போது, அவரைச்  சந்திக்க மனுக்களோடு, விவசாயிகள் விழா நடைபெறும் பகுதியை நோக்கி வந்தனர்.

இதனைக் கண்ட  காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, விழா நடைபெறும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்று கூறினர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எட்டு வழிச் சாலைக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரகங்களை கையில் ஏந்திய படி போரட்டத்தில் ஈடுபட்டனர்.

விழாவில் தமிழக முதல்வர் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு தரையில் அமர்ந்த விவசாயிகள், தங்கள் மனுவை அளிக்க அனுமதிக்கும் வரை காத்திருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விவசாயிகள் காத்திருந்தும், முதல்வரைச் சந்தித்து மனு தர அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறையினரிடம் விவசாயிகள் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த வேளையில் முதல்வர் விழாவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். 

இது குறித்து போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அரசு விழாவில் பங்கேற்க வந்த தமிழக முதல்வரை, எட்டு வழி சாலைக்கு நிலம் கொடுக்க தயாராக இருப்பதாக கூறுவதாக கூறி அதிமுகவினரால் அழைத்து வரப்பட்ட விவசாயிகளை சந்திக்க அனுமதித்த காவல்துறையினர், தற்போது தங்களை மட்டும் அனுமதிக்காது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

தன்னை ஒவ்வொரு மேடையிலும் சாதாரண விவசாயி என்று கூறி கொள்ளும் முதல்வர், விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் நீதிமன்றத்தில் தவறான பொய்யான தகவல் தெரிவித்து வருவதை நிறுத்தித் வேண்டும் என்றும், ஒரு அரசு விழாவில் மக்களைச் சந்திக்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்றும் கூறினர்.

கடந்த ஒரு வருடமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களை சந்தித்து தங்களின் குறைகளை அவர் கேட்க தவறியதால், விவசாயிகளான தாங்களே அவரை சந்திக்க வந்ததாகவும், ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz