நூற்பாலை மூடப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும் உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து, தொழிலாளர்கள் போராட்டம்!

Monday 05, August 2019, 23:10:38

சேலம் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் அதிக அளவில் இருந்ததால் கடந்த 1964 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில், சேலம் உடையாப்பட்டி அருகே சுமார் 40 ஏக்கர் நிலபரப்பில் சேலம் கூட்டுறவு நூற்பாலை துவங்கப்பட்டது. இந்த நூற்பாலையில் 250 க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தரமாகவும், 1000 த்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த கூட்டுறவு நூற்பாலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி இந்த கூட்டுறவு நூற்பாலை மூடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும், மூடப்பட்ட போது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கிட வேண்டும் என்று கூறி கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் இது குறித்து தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன்பாடியில், நீதிமன்றமும் உரிய இழப்பீடு வழங்கிட உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்காமலும், அதிமுக அரசு, இந்த நூற்பாலையில் இருந்த இயந்திரங்களை குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்பனை செய்ததது. இதனை அறிந்த நூற்பாலை தொழிலாளர்கள், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று அரசுக்கும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தனர்.

 

ஆனால் இது வரை அரசின் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த நூற்பாலை தொழிலாளர்கள் இன்று தங்களது குடும்பத்தோடு நூற்பாலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து, அம்மாபேட்டை காலனி பகுதியில் இருந்து பல்வேறு பொருட்களுடன் பேரணியாக நூற்பாலையை நோக்கி வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினர், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல், நூற்பாலைக்குள் நுழைய முற்பட்டனர். இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூறுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் கூறும் போது, கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் தங்களுக்கு உரிய இழப்பிடு வழங்கிட அரசு தயங்கி வருவதாகவும், இதன் காரணமாக இங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இதன் காரணமாகவே நூற்பாலையில் குடியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு உரிய பதில் அளிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தனர்.. நூற்பாலையில் தொழிலாளர்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz