விலைக்கு வாங்கும் எண்ணத்துடன் சேலம் உருக்காலையை தனியார் துறையினர் பார்வையிட வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உருக்காலை நுழைவு வாயிலின் முன்பு தொழிலாளர்கள் போராட்டம்

Monday 05, August 2019, 23:21:06

தமிழகத்தில் உள்ள மிக பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையாக, மத்திய பாஜக ஆலோசனையின் பேரில் செயில் நிர்வாகம், சர்வதேச டெண்டருக்கு அழைப்பு விடுத்து இருந்தது. ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வரை டெண்டர் கோரலாம் என்று அறிவித்து இருந்த நிலையில், டெண்டர் கோர யாரும் வராததால், டெண்டருக்கான கால நீடிப்பை வரும் 20 ஆம் தேதி வரை நீடித்து உள்ளது.

இந்த நிலையில், சேலம் உருக்காலையை பார்வையிட தனியார் துறையினர் ஆலைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, ஆலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கத்தினர், தனியார் நிறுவனத்தினரை உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம் என்பதனை வலியுறுத்தும் வகையில், ஆலையின் நுழைவு வாயிலின் முன்பு காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

தொமுச, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர், இன்று காலை முதல் ஆலையின் பிரதான நுழைவு வாயிலின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில், இந்த காத்திருப்பு போராட்டத்தை நடத்திட திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் ஆலைக்கு வரும் அடையாளம் தெரியாத வாகனங்களை சோதனை செய்த பின்னரே ஆலைக்குள் அனுமதித்து வருகின்றனர். தொழிலாளர்களின் இந்த போராட்டத்தினால் ஆலை வாளகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள தெரிவிக்கும் போது, தொழிலாளர்களின் பல்வேறு கட்ட போராட்டத்தை கண்டு கொள்ளாமல், மத்திய பாஜக அரசானது, தனியார் மயமாக்கல் முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் தனியார் நிறுவனத்தினர் ஆலையை பார்வையிட வருவதாக தகவல் வந்துள்ளதாகவும், அவர்களை ஆலைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிடவே இந்த போராட்டம் நடைபெற்று வருவதாகவும், இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், இது தவிர உருக்காலையை தனியார் மாயக்கலை கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தனியார் துறையினர் உள்ளே நுழையாமல் இருக்க எந்த வித போராட்டத்திற்கும் தயாராக உள்ளதாகவும் அவர்கள தெரிவித்து உள்ளனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz