திருச்சி: போலீசிடம் இருந்து தப்பியோட முயன்று வழுக்கி விழுந்ததில் கற்பழிப்புக் குற்றவாளிக்கு எலும்பு முறிவு !

Tuesday 06, August 2019, 22:47:06

திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் சரகத்தில் கடந்த 04.08.19ம் தேதி அதிகாலையில் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் தன் நண்பருடன் ஊருக்கு சென்று விட்டு அதிகாலை நேரம் என்பதால் கல்லூரி வாசல் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு நபர் தன்னை ஊர்க்காவல்படை வீரர் என்றும், அவர்கள் இருவர் மீதும் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரித்துள்ளார், பிறகு மாணவியுடன் இருந்த அந்த ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு, அந்த பெண்ணை விசாரிக்க வேண்டும் எனக் கூறி தனது வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் வைத்து அப் பெண்ணை பாட்டிலை உடைத்து மிரட்டி, கற்பழித்துள்ளான் அந்த அயோக்கியன். பிறகு இந்த விவரத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று அந்தப் பெண்ணை அச்சுறுத்தி  திருப்பி அனுப்பியுள்ளான்.

பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் ஆண் நண்பர் மூலம் இந்த விவரத்தைப் புகாராகப் பெற்ற  திருச்சி SP ஜியாவுல் ஹக், கற்பழிப்புக் குற்றவாளியைப் பிடிக்க ASP. பிரவீண்குமார் டோங்ரோ தலைமையில் திருவரம்பூர் ஆய்வாளர் ஞானவேலன்  குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார்,  அகிலன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினை  அமைத்தார்.

சுறுசுறுப்பாகக் களம் இறங்கிய தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே கற்பழிப்பில் ஈடுபட்டவன்  பெயர்  மணிகண்டன் என்பதையும் துவாக்குடி வாழவந்தான் கோட்டையில் பெரியார் நகரில் அவன் வசித்து வருகிறான் என்பதையும் கண்டுபிடித்தனர். தனிப்படையினர் அவனை மடக்கிப் பிடித்துகைது செய்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார்,  அகிலன் ஆகியோர் காவலர்களுடன் குறிப்பிட்ட இடத்தில் வைத்து மணிகண்டனை மடக்கியபோது   அவன் போலிஸாரிடமிருந்து தப்பி ஓட முயன்றுள்ளான். அந்த சமயத்தில் எதிர்பாராவிதமாக கட்டிடத்தில் வழுக்கி விழுந்ததில் அவனுக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

தனிப்படையினரால் பிடிக்கப்பட்ட கற்பழிப்புக் குற்றவாளிக்குப் பொள்ளாச்சி மற்றும் திருச்சியிலும் வழக்குகள் இருப்பதாகப் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz