பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் வேலுமணி ஆய்வு

Saturday 10, August 2019, 20:53:48

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக பில்லூர் அணை நிரம்பி பில்லூர் அணையின் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரையோரப்பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் 200மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 17 முகாம்களில் 397 குடும்பங்களை சேர்ந்த 1,035 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

கோவையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  கனமழை காரணமாக 72 வீடுகள் பகுதி சேதமடைந்ததாகவும், 27 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளது என்றும்,மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் 350 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz