ப.சிதம்பரத்துக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ள சி.பி.ஐ.யின் கேள்விக் கணைகள்!

Friday 23, August 2019, 15:58:03

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்ட சில நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதாக புகார் எழுந்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் சிதம்பரம் சி.பி.ஐ. அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.  டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு போகப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சி.பி.ஐ. துணை சூப்பிரண்டு பார்த்தசாரதி தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழு ப.சிதம்பரத்திடம் நேற்று இரவு நீண்ட நேரம்  விசாரணை நடத்தியது.

சிதம்பரத்திடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கப்பட்ட போதிலும் அவற்றுள் 90 சதவீத கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதித்ததாக அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சிம்பரத்திடம் கேட்கப்பட்டுள்ளதாகக்  கூறப்படும் 20 முக்கிய கேள்விகள் குறித்த விபரம் சி.பி.ஐ. வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது. அந்தக் கேள்விகளின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவதற்கு பணம் எங்கே இருந்து வந்தது?

2. இங்கிலாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 3 நாடுகளில் வாங்கப்பட்ட சொத்துக்களுக்கு பணம் எங்கு இருந்து கொண்டு செல்லப்பட்டது?

3. பார்சிலோனா நகரில் வாங்கப்பட்ட டென்னிஸ் கிளப்புக்கு பணம் பரிமாற்றம் எப்படி நடந்தது?

4. இங்கிலாந்து அமைப்பு ஒன்றில் இருந்து கார்த்தி சிதம்பரம் பணம் வாங்கியது ஏன்?

5. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு சலுகை காட்டியதன் மூலம் கிடைத்த கமி‌ஷன் பணத்தை எங்கு முதலீடு செய்திருக்கிறீர்கள்?

6. வெளிநாடுகளில் நீங்கள் நடத்தி வரும் போலி நிறுவனங்கள் பற்றி எங்களிடம் ஆதாரம் உள்ளது. அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

7. உங்களுக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் எத்தனை போலி நிறுவனங்கள் உள்ளன?

8. உங்களது போலி நிறுவனங்கள் எந்தெந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளன. எவ்வளவு பணத்தை முதலீடு செய்துள்ளன?

9. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் மொரீசியஸ் தீவில் உள்ள 3 நிறுவனங்களிடம் இருந்து ரூ.305 கோடி பெற்றது தொடர்பாக நீங்கள் பேசியது என்ன?

10. மத்திய நிதி அமைச்சகத்தின் அந்நிய முதலீடு அனுமதி அமைப்பில் கார்த்தி சிதம்பரம் தலையிட்டது ஏன்?

11. அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்ட விதிகளில் உங்களது மகன் கார்த்தி சிதம்பரம் மூக்கை நுழைப்பதற்கு நீங்கள் அனுமதி கொடுத்தது ஏன்?

12. பாராளுமன்ற வடக்கு பிளாக்கில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன அதிபர் இந்திராணியை நீங்கள் சந்தித்து பேசியது ஏன்?

13.கார்த்தி சிதம்பரத்துக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி இந்திராணியிடம் நீங்கள் கேட்டுக்கொண்டது ஏன்?

14. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான பீட்டர் முகர்ஜியையும் நீங்கள் சந்தித்து பேசியது என்ன?

15. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு ரூ.305 கோடி வெளிநாடுகளில் பணம் திரட்ட அனுமதி கொடுத்ததில் வடக்கு பிளாக் அதிகாரிகளில் யார், யாரெல்லாம் உங்களுக்கு உதவி செய்தார்கள்?

16. இந்த விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் நோட்டீஸ் அனுப்பியும் நீங்கள் உரிய பதில் சொல்லாதது ஏன்?

17. டெல்லி ஐகோர்ட்டு உங்களது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த பிறகு நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து தலைமறைவாகி விட்டீர்கள். சுமார் 19 மணி நேரம் டெல்லியில் நீங்கள் யார் வீட்டில், யார் பாதுகாப்பில் இருந்தீர்கள்?

18. நீங்கள் தலைமறைவாக இருந்த நேரத்தில் உங்களது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் நீங்கள் வேறு சிலருடன் தொலைபேசியில் பேசியது எங்களுக்கு தெரியும். யாரிடம் இருந்து செல்போன்களை வாங்கி பேசினீர்கள்?

19. சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்துவிட்டு வந்த போது உங்களது உதவியாளரையும், டிரைவரையும் நடு வழியிலேயே இறக்கி விட்டிருக்கிறீர்கள். இதன் மூலம் நாட்டில் இருந்து தப்பி செல்ல முயற்சி செய்தீர்களா?

20. சி.பி.ஐ. உங்கள் வீட்டில் நோட்டீஸ் கொடுத்த பிறகும், நீங்கள் நேரில் வந்து ஆஜராகாதது ஏன்?

இது போன்ற பல்வேறு கேள்விகளை சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். சிதம்பரத்தை விசாரிக்க இன்னும் 3 நாட்கள் மேலும் கால அவகாசம் இருப்பதால் அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு அவரிடம் இருந்து விடை பெற வேண்டிய கட்டாயத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz