ப.சிதம்பரத்தை, சுவர் ஏறிக் குதித்து சி.பி.ஐ. கைது செய்ததற்கு கி.வீரமணி கண்டனம்

Friday 23, August 2019, 16:06:14

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, சுவர் ஏறிக் குதித்து சி.பி.ஐ. கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை :

“அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சரும், இந்நாள் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரில் முன்னணி விமர்சகர்களில் ஒருவருமான மூத்த வழக்குரைஞர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் மீது சி.பி.ஐ. மூலம் பா.ஜ.க. அரசு வழக்குகள் தொடுத்துள்ளது.

சில வழக்குகளில் அவர் விசாரணைக்குச் சென்று, அவரைக் கைது செய்யக்கூடாது என்று பலமுறை அவகாசமும் கொடுத்து, வழக்கு விசாரணை தொடர்ந்தது. ஒரு குறிப்பிட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தால் அவரது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது நேற்று முன்தினம்.

அவர் மறுசீராய்வு மனுவை தனது வழக்குரைஞரின் மூலம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, உடனடியாக அது விசாரணைக்கு வராமல், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது. இடையில் ஒரு நாள் இருக்கும் நிலையில், ‘‘அவர் தலைமறைவு - தேடப்படும் குற்றவாளி’’ என்று அவரது இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அவர் ஓடி ஒளியவோ, தலைமறைவாகவோ இல்லை; நேற்று (21.8.2019) மாலை டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில், ‘‘வழக்குரைஞர்களுடன் அடுத்தகட்ட சட்டப்பூர்வ பரிகார நடவடிக்கைகளுக்கான ஆலோசனைப் பணியில் ஈடுபட்டிருந்தேன். சட்டத்தை மதிப்பவன் நான்’’ என்று ஒரு அறிக்கையை வாசித்தார். பிறகு வீடு திரும்பிய நிலையில், சி.பி.ஐ. தொடர்ந்து சென்று அவரைக் கைது செய்தது.

சி.பி.ஐ. அதிகாரிகளுக்குக் கடமையை நிறைவேற்றிடும் பொறுப்பு உண்டு என்றாலும், இரவில் அவருடைய வீட்டின் சுவர் ஏறிக் குதித்து, சிதம்பரம் ஏதோ ஒரு பயங்கரவாதி, தீவிரவாதி, சமூக விரோதி என்ற தோற்றத்தை உருவாக்குவதுபோல நடந்துகொண்டதை, நடுநிலையாளர்களும், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டம் தன் கடமையைச் செய்வதில் அரசியல் வன்மமோ, காழ்ப்புணர்வோ அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதுபோல நடந்திருப்பது நியாயமானதல்ல. இது அவரை மாத்திரம் அச்சுறுத்த அல்ல - அரசின் கொள்கைகளை, திட்டங்களை விமர்சிக்கும் அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு முறையாகவும் கையாளப்படுகிறது.

இதை ஜனநாயகவாதிகளும், அரசியல் சட்ட மாண்புகளை மதிப்போரும் ஒருபோதும் வரவேற்கமாட்டார்கள். ஜனநாயகம் - கருத்துரிமையின் குரல்வளை நெரிக்கப்படக் கூடாது!

சிறந்த சட்ட நிபுணரும், வழக்குரைஞருமான நண்பர் சிதம்பரம் அவர்கள் சட்டப்படி இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வார் என்பது உறுதி!” என கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz