காஷ்மீர் அடக்குமுறையைக் கண்டித்துப் பதவி விலகிய கேரளா ஐ.ஏ.எஸ். அதிகாரி!

Monday 26, August 2019, 18:53:36

காஷ்மீரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு, அடக்குமுறையும் அமலில் இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று சொல்லி கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

கண்ணன் கோபிநாத், கேரளாவைச் சேர்ந்த 2012 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவர் இப்போது தாத்ரா நகர், ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின்சாரம், மரபுசாரா எரிசக்தித் துறைச் செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த புதன் கிழமை (ஆகஸ்டு 21) தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் கண்ணன் கோபிநாத் அதுகுறித்த காரணங்களையும் ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

“என் கருத்துரியை மீண்டும் நான் பெற விரும்புகிறேன். ஒரு நாளாவது நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தன்னில் இருக்கும் ஒரு மாநிலம் முழுக்க தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது, அங்கே மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருகின்றன.

இந்த நாட்டின் ஆட்சிப் பணி அதிகாரியாக இருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்டால் நான் அவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்பதால்தான் எனது ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்கிறேன். நான் ஒரு செய்தித் தாள் நடத்துபவராக இருந்தால் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் எண்களை மட்டுமே பிரசுரிப்பேன். இன்று ’19’ என்று குறிப்பிட்டிருப்பேன். ஏனெனில் காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து இன்று 19 ஆவது நாள்” என்று கூறியிருக்கிறார் கண்ணன் கோபிநாத்.

மேலும் அவர், “நான் நிறைய நம்பிக்கையோடு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தேன். குரலற்றவர்களின் குரலாக இருக்கலாம் என்ற நம்பிக்கையோடுதான் ஐ.ஏ.எஸ். பணிக்கு வந்தேன். ஆனால் இங்கே என் குரலையே நான் இழந்துவிட்டேன். எனது ராஜினாமா என்பது ஒரு பொருட்டான விளைவை, தாக்கத்தை ஏற்படுத்துமா என்று நான் நினைக்கவில்லை. நாடு ஒரு கொந்தளிப்பான நேரத்தை கடந்து செல்லும்போது, ‘நீ என்ன செய்தாய்’ என்று என்னிடம் யாராவது கேட்டால், ‘நான் லீவு எடுத்துக் கொண்டு அமெரிக்கா போய் மேல்படிப்பு படிக்கப் போகிறேன்’ என்று சொல்ல விரும்பவில்லை. அதைவிட வேலையை விட்டு விலகுவது நல்லது.

இந்த நாட்டின் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசுகிறோம். அப்படி மாற்ற வேண்டுமெனில் நாம் இந்த சிஸ்டத்துக்குள் இருக்க வேண்டும். நான் இந்த சிஸ்டத்தை மாற்றுவதற்கு முயற்சித்தேன். ஆனால் இதை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனக்கென்று எந்த சேமிப்பும் இல்லை. இப்போதுவரை அரசு வீட்டில்தான் இருக்கிறேன். வேலையை விட்டு போய்விட்டால் எங்கே போவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. என் மனைவி வேலையில் இருக்கிறார். அவர் எனக்கு துணையாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார் பதவியை ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாத்.

அண்மையில் கேரள வெள்ளத்தின் போது தாத்ரா நகர் சார்பில் நிவாரண உதவிகளை கேரள முதல்வரிடம் அளிக்க வந்த கண்ணன் கோபிநாத், பணிக்கு விடுப்பு போட்டுவிட்டு தான் ஐ.ஏ.எஸ். என்று காட்டிக் கொள்ளாமலேயே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கண்ண கோபிநாத் அருகே உள்ள புதுப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பிர்லா தொழில்நுட்ப மையத்தில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு முடித்த கண்ணன் கோபிநாத், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2012 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் நாட்டிலேயே 59 ஆவது இடத்தில் வெற்றிபெற்றார்.

காஷ்மீர் மக்களுக்காக கண்ணன் ஐ.ஏ.எஸ்.சின் ராஜினாமா முடிவு இந்தியா முழுதும் ஊடகங்களிடையே விவாதப் பொருளாகி வருகிறது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz