வாகனங்கள் விற்பனையில் சரிவு -அசோக் லேலண்ட் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

Friday 06, September 2019, 15:10:03

அசோக் லேலண்ட் ஊழியர்களுக்கு இன்று முதல் 9ம் தேதி வரை கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியான வாகனங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அசோக் லேலண்ட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 5 நாட்கள் உற்பத்தியை முடக்குவதால் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் என்று 9,000 பேர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களான ஹூண்டாய், மாருதி , டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து, கனரக வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 'அசோக் லேலண்ட்' நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்துள்ளது.

இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் விற்பனை 50 சதவீதம் சரிந்தது. கடந்த மாதத்தில் 8,296 வாகனங்களை மட்டுமே விற்றிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. வர்த்தக வாகனச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் சுணக்கம் காரணமாக கட்டாய விடுமுறையளிக்க முடிவு செய்யப்படதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

 
© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz