ஆறு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பீகார் குண்டுவெடிப்புத் தீவிரவாதி சென்னையில் கைது!

Tuesday 10, September 2019, 16:23:42

கடந்த 2013 ஆம் ஆண்டு பீகார் மாநில குண்டு வெடிப்பில் தொடர்புடைய வடமாநில இளைஞர் ஷேக் அசதுல்லா என்பவர் சென்னை நீலாங்கரை பகுதியில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2013 ல் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, போலீஸ் பிடியில் இருந்துத் தப்பித்துத் தலைமறைவான  தீவிரவாதிகளை கொல்கத்தாவை சேர்ந்த தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தலைமறைவான  தீவிரவாதிகளில் ஒருவனான ஷேக் அசதுல்லா என்பவன் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை நீலாங்கரைப் பகுதியில் உள்ள அண்ணா நகர் முதல் தெருவில் பதுங்கி இருப்பதாக கொல்கத்தா தனிப்படை போலீசாருக்கு  இரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து  மேற்கு வங்கத்திலிருந்து தமிழகத்துக்கு விரைந்து வந்த கொல்கத்தா தனிப்படை போலீசார் சென்னை நீலாங்கரை பகுதி காவல் துறை அதிகாரிகளின் உதவியோடு தீவிரவாதி ஷேக் அசதுல்லாவை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஷேக் அசதுல்லாவை இரவு முழுவதும் நீலாங்கரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் துரைப்பாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலத்தில் வைத்து விசாரணை நடத்திய பின் குற்றவாளியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேற்கு வங்க போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz