தி.மு.க.வினர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை - துரைமுருகன் ஆதங்கம்

Tuesday 10, September 2019, 17:11:59

திமுகவினர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை என்று  நூல் வெளியீட்டு விழா ஒன்றில் ஆதங்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகன், அனைத்து ஓட்டல்களிலும் வட மாநிலத்தவர் பணியில் இருப்பதால் எந்த மொழியும் கற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார் .

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியனின் திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் வீரமணி, ஆ.ராசா, சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தற்போது, திமுகவினர் வீடுகளிலே கூட தமிழில் பெயர் வைப்பதில்லை என்று ஆதங்கப்பட்டார்

இப்போதெல்லாம் ஓட்டல்களில் வட இந்தியர்கள் தான் அதிகமாக வேலை செய்வதாகவும் அவர்களுக்கு ஹிந்தியில் பேசினால் மட்டுமே புரிவதாக தெரிவித்த துரைமுருகன், அதனால் எந்த மொழியும் கற்றுக் கொள்ளலாம் என்று கிண்டலடித்தார்.

இங்கு வெள்ளையர்கள் வரவில்லை என்றால் சோமாலியா மக்கள் போல் இருந்திருபோம் என்றும், வெள்ளையர்கள் தான் ஜனநாயகத்தை சொல்லிக் கொடுத்தவர்கள் என்றும் துரைமுருகன் கூறினார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz