விவசாய நிலத்தை ஆக்கிரமித்து உணவுப் பொருள் பூங்கா அமைப்பதைத் தடுத்து நிறுத்த ஆட்சியரிடம் சேலம் தி.மு.க. எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் மனு.

Tuesday 17, September 2019, 17:51:14

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைத்திட சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகளையும், விவசாய நிலத்தையும் ஆக்கிரமிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வது உடனடியாக நிறுத்திட வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுடன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கஞ்சமலை அடிவார பகுதியான பெரியசீராகபாடி, கல்பாரப்பட்டி ஊராட்சிகளில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு தூய பட்டா வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி அங்கு உணவு பொருள் பூங்கா அமைக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நிலம் அளக்கப்படுவதாக கூறிய அதிகாரிகள் தற்போது உணவுப் பொருள் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக கூறி, அங்குள்ள நிலத்தை காவல்துறையினரின் துணையோடு அளவீடு செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

 இந்த நிலையில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களை அப்புறப்படுத்தி உணவு பூங்கா அமைக்கும் பணியை மாற்று இடங்களில் குடியிருப்பு இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தார்.

இது குறித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கூறும் போது, “பெரியசீரகாபாடி பகுதியில் வசித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினரை வலுகட்டாயமாக வெளியேற்றி அந்த இடத்தில் உணவு பொருள் பூங்கா அமைத்திடும் நடவடிக்கையை கைவிட்டு அதற்கு அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், “சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஓமலூர், பனமரத்துபட்டி ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் மிக வேகமாக பரவி வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் திமுக தலைவரின் அனுமதி பெற்று மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்தார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினருடன், வீரபாண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெண்ணிலாசேகர், உள்ளிட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz