இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது காலணியுடன் கால் வைப்பதா? - நடிகர் விஜய்க்கு இறைச்சி வியாபாரிகள் கண்டனம்!

Monday 23, September 2019, 19:08:21

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் சுவரொட்டிகள், கடந்த ஜூன் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வெளியாகின. அதில், இளமையான தோற்றத்தில் இருக்கும் விஜய், கால்பந்தை தூக்கி போட்ட படி போஸ் கொடுக்க, மற்றொரு விஜயோ, ஆத்திரத்துடன் காணப்படுவார்.

இருக்கையில் அமர்ந்தபடி, கத்தி செருக்கப்பட்ட இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்திருப்பார். அந்தப் புகைப்படம் தான் தற்போது இறைச்சி வியாபாரிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் தெய்வமாக மதிக்கும் இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது காலணியுடன் கால் வைப்பதா? என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்து நடிகர் விஜய் தங்கள் தொழிலை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி கோவை ஆட்சியர் அலுவலகம் முன் இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கோவை ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட அவர்கள், பிகில் சுவரொட்டியைக் கிழித்து எறிந்தனர்.

சர்ச்சைக்குரிய சுவரொட்டி தொடர்பாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய போது, போஸ்டரை நியாயப்படுத்தும் விதமாக பதில் கிடைத்திருப்பது தங்களது ஆத்திரத்தை அதிகப்படுத்தி உள்ளதாகவும் இறைச்சி வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்காவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz