சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரியார் பல்கலைகழக தொழிலாளர்கள் கருப்பு உடை அணிந்து உண்ணாவிரத போராட்டம்

Tuesday 08, October 2019, 17:30:04

மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்களை தொகுப்பூதிய பணியாளராக நியமித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியார் பல்கலைகழக தொழிலாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு உடை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதியத்தை நாள் கணக்கில் வழங்காமல், மாத ஊதியமாக வழங்கிட வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்களை தொகுப்பூதிய பணியாளர்களாக பணி நிலை உயர்த்திட வேண்டும், காலியாக உள்ள பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் பணியிடத்தை நிரப்பிட வேண்டும், முறைகேடாக அளிக்கப்பட்ட பதவி உயர்வினை ரத்து செய்திட வேண்டும், பல்கலைகழகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியார் பல்கலைகழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்சியாக கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தொழிலாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில், பல்கலைகழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கருப்பு உடை அணிந்து கொண்டு, பல்கலைகழக நிர்வாக முறைகேட்டை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசு முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன், பெரியார் பல்கலைகழகத்தில் தொழிலாளர் விரோத போக்கு நிலவி வருவதாகவும், குறிப்பாக பெண் பணியாளர்களை காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை பணியில் ஈடுபடுத்தபடுவது என்பது கண்டிக்கதக்கது என்றும், தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பல முறை அரசுக்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பல்கலைகழக வேந்தரான ஆளுநருக்கு பல முறை எடுத்துரைத்தும் அவர் கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறும்போது,இந்தப் பல்கலைகழகம் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகழகத்திலும் ஊழல் அதிகரித்து உள்ளதாகவும், பணி நியமனம் உள்ளிட்ட அனைத்திற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், இது போன்ற முறைகேடுகளை கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன் வைத்தும் இந்த போராட்டம் நடைபெற்று வருவதாகவும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz