பெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி

Saturday 15, September 2018, 14:30:04

பெரம்பலூர் பியூட்டி பார்லரில் அதை நடத்தி வந்த பெண்மணிக்கு திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் உதையோற்சவம் நடத்திய சம்பவம் 4 மாதப் பழையது என்றாலும் தற்போது அது சமூக ஊடகங்களில் வைரலாக விரவிப் பரவியதன் காரணமாகத் தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதன் காரணமாக செல்வகுமார் போலீஸாரால் கைதும் செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வு தி.மு.க. தலைமைக்குத் தர்ம சங்கடத்தினை ஏற்படுத்தி விட, பெரம்பலூர் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக அக் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

ஒரு அடிதடி சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி அது தொடர்பாக ஒரே நாளில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதற்கு ஒரே கட்சியை சேர்ந்த இருவர், ஒரே பெண்ணை டாமினேட் செய்ய முற்பட்டதே காரணம் என பெரம்பலூர் வட்டாரத்தில். பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவப் பின்னணி என்ன என்பது பற்றி சத்யா மற்றும் செல்வகுமார் இரு தரப்பிலும் விசாரித்தத்தில் கிடைத்தத் தகவல்களை அப்படியே இங்குத் தொகுத்துத் தந்துள்ளோம்.

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் மயூரி என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் சத்யா. இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த  தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் என்பவருக்கும் நீண்ட நாட்களாகவே கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. சத்யா பியூட்டி பார்லர் நடத்திவரும் அதே பகுதியில் தான் செல்வகுமாருக்குச் சொந்தமான பர்னிச்சர் கடையும் உள்ளது.

கொடுக்கல், வாங்கல் மூலம் ஏற்பட்ட தொடர்பில் செல்வகுமாருக்கு சத்யாவின் மீது ஒருவித புரிதல் ஏற்பட்டு விட, அவரது அனைத்து விஷயங்களிலும்  உறுதுணையாக இருந்திருக்கின்றார். இதன் காரணமாக சத்யாவை அடிக்கடி அவரது அழகு நிலையத்தில் வைத்து செல்வகுமார் சந்தித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தம்பதியினரைப் போல வாழும் நெருக்கத்தை இந்தச் சந்திப்புகள் அவர்களுக்குள் ஏற்படுத்தின. இது அங்கு பணிபுரிந்த பெண்களுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில் தான், செல்வகுமாரிடம் சத்யா தனது பியூட்டி பார்லரை மேலும் கிளைகளுடன் சொகுசாக்கி, விரிவுபடுத்தும் எண்ணத்தினை  கூறியிருக்கிறார். அதனை ஆமோதித்த செல்வகுமாரும் லட்சக்கணக்கில் ரொக்கத்தினை அதற்கெனத் தர, மயூரி பியூட்டி பார்லர் பெரம்பலூரில் மேலும் இரண்டு புதிய கிளைகளுடன் விரிவு படுத்தப்பட்டது.

இந்த சமயத்தில் சத்யாவுக்கு தி.மு.க. நகரச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசாவின் தீவிர விசுவாசியுமான பிரபாகரன் அறிமுகம் புதியதாகக் கிடைக்க, அவரிடமும் தனது தொடர்பினை வளர்த்துக் கொண்டார். ஒரே கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும் பெரம்பலூர் தி.மு.க.வினைப் பொறுத்த மட்டில்  முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாருக்கும், நகரச் செயலாளர் பிரபாகரனுக்கும் இடையே டெர்ம்ஸ் சரி இல்லை. இருவருக்குமிடையே நீண்ட நாட்களாகவே பனிப்போர் இருந்து வந்துள்ளது.

பிரபாகரன்

இந்த நிலையில், சத்யா தனது விரோதி பிரபாகரனுடன் நட்புப் பாராட்டிப் பழகி வருகிறார் என்ற தகவல் செல்வகுமாரை எட்ட, மனுஷன் படு டென்ஷனாகி அது குறித்து சத்யாவை நேரடியாகவே கண்டித்துள்ளார். ஆனால், அதனை சத்யா கண்டுகொள்ளவே இல்லை என்பது செல்வகுமாரின் கோபத்தினை அதிகரிக்கச் செய்துள்ளது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த செல்வகுமார், தான் தந்த இருபது லட்ச ரூபாயினை செட்டில் செய்து விட்டு, யாரிடம் வேண்டுமானாலும் பழகிக் கொள்ளும்படி சத்யாவிடம் சொல்லியிருக்கிறார். இதன் பிறகு இருவருக்குமிடையே கடுமையான தடித்த வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட, கோபம் தலைக்கேறியவராக செல்வகுமார் சத்யாவை  அடித்து உதைத்துள்ளார். கடந்த மே மாதம் 25ந் தேதி மதியம் மூன்று மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

செல்வகுமார் தன்னைத் தாக்கிய சம்பவம் வெளியில் தெரிந்தால் அது தனக்குத்தான் அவமானம் என்று கருதிய சத்யா இந்த விவகாரத்தை நேரில் பார்த்த மூன்று பணிப்பெண்களிடமும் வெளியில் சொல்லக் கூடாது என கண்டிப்பாகச் சொல்லி விட்டார். அவர்களைத் தவிர பார்லருக்குள் பாதுகாப்புக்கென அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் இந்தத் தாக்குதல் சம்பவம் பதிவாகி இருந்தது.

பிறகு, எப்படியோ இந்தத் தகவல் அண்மையில் பிரபாகரனை எட்ட, அவர் கொதித்துப் போனார். சத்யாவுடனான தனது தொடர்புக்குத் தடையாக இருக்கும் செவகுமாரை சத்யாவிடம் இருந்து பிரிப்பது; அதே சமயத்தில் கட்சியிலும் தனக்கு எதிராகச் செயல்பட்டு வரும் செல்வகுமாரை கட்சியில் இருந்தே ஓரங்கட்டி ஒழித்துக் கட்டுவது என  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க அவர் திட்டமிட்டார். தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளைத் தனதுத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முடிவெடுத்த பிரபாகரன் சத்யாவினைக் கன்வின்ஸ் செய்து அந்தக் கிளிப்பிங்குகளைப் பெற்றுள்ளார்.

சிசிடிவி புட்டேஜுகள் கவனமாக எடிட் செய்யப்பட்டு, பிரதி எடுக்கப்பட்ட பின் அவை  மீடியாக்கள் மற்றும், சமூக வலைத்தளங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. இருபது லட்ச ரூபாய் கடனை வசூலிக்க ப்யூட்டி பார்லருக்குள் புகுந்து ஒரு பெண்ணை அராஜகமாகத் தாக்கிய தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் என்று சிசிடிவி காமிரா காட்சிகளுடன் செய்திகள் டி.வி.க்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவ, செல்வகுமாருக்குத் தலைவலி தொடங்கியது. அதன் பிறகே விழித்துக் கொண்ட காவல்துறை அவசரமாக வழக்குப் பதிந்து செல்குமாரைக் கைது செய்தது. தி.மு.க.வின் பெயரும் இந்த விவகாரத்தில் இணைத்து இழுக்கப்பட்டதை விரும்பாத கட்சித் தலைமை செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்தது என்று கூறி முடித்தனர் விஷயமறிந்தவர்கள். செல்வகுமார், தான் கைது செய்யப்படுவதற்கு முன் காவல் நிலையம் வாசலில் வைத்து செய்தியாளர்களிடம் "இது அத்தனைக்கும் பிரபாகரனே காரணம்" என்று சுருக்கமாகச் சொல்லிச் சென்றுள்ளார். 

இது இப்படி இருக்க முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் காவல்துறை நண்பர் ஒருவர், “சிசிடிவி காட்சிகளை கவனமாகப் பார்த்தால்  அதில் தன் கழுத்தில் இருந்து தாலியினைக் கழற்றிய சத்யா அதைப் பணிப்பெண்ணிடம் மூலம் செல்வகுமாரிடத்தில் தரச் சொன்ன காட்சி தெளிவாகவேப் பதிவாகியுள்ளது. மதியம் 3மணி 21நிமிடங்கள் 30நொடிகளில் பதிவான காட்சி அது. சத்யா கழற்றித் தந்த தாலி நெருக்கமானவர்களாக வாழ்ந்த சமயத்தில் அவருக்கு செல்வகுமார் கட்டியதாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் கருதுகிறோம். அந்தத் தாலியை சத்யா கழற்றியதைப் பார்த்து திகைத்துப் போன செல்வகுமார் ஆவேசத்துடன் மீண்டும் அவரை உதைக்கிறார்” என்றார்.

இந்த விஷயம் குறித்து சத்யா தரப்பினைச் சேர்ந்த ஒருவர், “அப்படியெல்லாம் கண்டதைச் சொல்லக் கூடாதுங்க. கடன் வசூலிக்க வந்த செல்வகுமார் பணம் இப்பவே வேணும்னு கேட்டு அடிச்சதப் பொறுக்காம. இப்போதைக்கு என் கழுத்தில தங்கமா இருக்கிறது தாலி மட்டும்தான். அந்தத் தாலியக் கூட கழற்றித் தந்திடறேன்; மீதிப் பணத்தை அப்புறமா செட்டில் செய்யறேன்னு கூட .சத்யா அந்த சமயத்தில சொல்லி இருக்கலாமில்லைங்களா?” என்று லாஜிக்காகக் கேட்டு நம்மை அசர வைத்தார்.

கமல் நடித்து வெளியான விருமாண்டி படத்தின் திரைக்கதைக்குப் பிறகு ஒரே  சம்பவம் பல கோணங்களில் சொல்லப்படுவது அனேகமாக இந்த விவகாரத்தில் மட்டும்தான் என பெரம்பலூர் இளைஞர் ஒருவர் நம்மிடம் சொன்னதின் நிஜம் தாமதமாகவே விளங்கியது.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz