பேரிடர் மேலாண்மை செயல் விளக்கம்: தீயணைப்புத்துறையினரின் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

Tuesday 15, October 2019, 17:28:45

நாடெங்கும் தீபஒளி பண்டிகை கொண்டாட்டம் விரைவில் கொண்டாடப்படவிருக்கும் அதே நிலையில் மழைக்காலமும் வருவதால் பொதுமக்கள் தீ மற்றும் புயல், வெள்ள விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகையை தமிழகமெங்கும் தீயணைப்புத்துறை செய்து வருகின்றது.

அந்த வகையில் நேற்று காலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தீயணைப்புத்துறையின் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை குறைப்பு தினத்தையொட்டி புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான செயல்விளக்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது.

பேரிடர் காலங்களில் ஏற்படும் நிகழ்வுகளில் இருந்து பொதுமக்கள் தங்களை தாங்களாகவே எவ்வாறு பாதுகாத்து கொள்ளுதல் தொடர்பாக முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

மழை அதிக அளவில் பெய்து வெள்ள அபாயம் ஏற்படும் போது வெள்ள எச்சரிக்கை வந்தவுடன் குடிநீர், ஈரப்பதமில்லாத உணவு மற்றும் குழந்தைகளுக்கான உணவுடன் பாதுகாப்பான இடத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருள்களையும் மற்றும், ஆவணங்களையும், வீட்டின் உயரமான இடத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

கால்நடைகளை மேடான பகுதிக்கு அப்புறப்படுத்தி அவைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். புயல் தொடர்பான எச்சரிக்கை மற்றும் செய்திகளை வானொலி, தொலைக்காட்சி மூலம் அவ்வப்போது தெரிந்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள மின் சாதம் இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து விட வேண்டும். குடிநீரை நச்சுத்தன்மை பரவாமல் பாதுகாக்க வேண்டும். உணவுப் பொருள்களை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். கெட்டுப் போன உணவுப்பொருள்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஈரப்பதமில்லாத உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும். இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, மொபைல் போன் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது. தீப்பிடித்த உடனே மிக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ(எண்100) தீயணைக்கும் படைக்கோ(எண் 101) போன் செய்யவும். இந்த போன் எண்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

சிலிண்டர் அருகில் தீக்குச்சியைக் கிழிக்கவோ, லைட்டரைப் பற்றவைக்கவோ சிறுவர்களை பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. சமைத்து முடித்ததும் அடுப்புத் தணலை அணைத்து விடவும். அடுப்பின் அருகே எளிதில் பற்றக்கூடிய குச்சிகள், வைக்கோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை வைக்கக்கூடாது.

கேஸ் அடுப்பு உபயோகத்தில் இல்லாத போது, சிலிண்டர் வால்வை மறக்காமல் மூட வேண்டும். பெண்கள் சமைக்கும் போது நைலான் உடைகளைத் தவிர்க்கவும். இத போன்ற முன்னெச்சரிக்கையை கடைபிடிப்பதன் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.


மேலும் பேரிடர் தொடர்பான விபரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி (எண்:1077)யை தொடர்பு கொள்ளவும். மேற்கண்டவாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியில் சாலைகளில் மரம் விழுந்தால் உடனடியாக இயந்திரங்கள் மூலம் எவ்வாறு அகற்றுவது தொடர்பாகவும், வெள்ளம் ஏற்படும்போது, பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது தொடர்பாகவும், தண்ணீர் கேன், குடம், காலியான சிலிண்டர் ஆகியவற்றை பயன்படுத்தியும், வெள்ளத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்கள், மூலம் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மு.வடிவேல் பிரபு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜவகர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz