தர்மபுரி : காவலர் உடற்தகுதி தேர்வு - மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பார்வையிட்டார்.

Wednesday 20, November 2019, 19:25:43
இரண்டாம் நிலை ஆண் மற்றும் பெண் போலீஸ் பணி, தீயணைப்பு மற்றும் சிறை காப்பாளர் பணி ஆகியவற்றிற்கான எழுத்து தேர்வில் தர்மபுரி மற்றும் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 3,748 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 2,785 பேர் ஆண்கள், 963 பேர் பெண்கள். இவர்களில் ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 6-ந்தேதி முதல் தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில் தொடங்கி நடைபெற்றது.
 
பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு தர்மபுரி வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பகுதி 2-ஆக ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யும் தேர்வு மைய சிறப்புத் தணிக்கை அதிகாரியுமான பெரியய்யா, உடற்தகுதி தேர்வுக்குழு உறுப்பினர்களான சென்னை ஆயுதப்படை போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமாரி, வேலூர் சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயபாரதி, தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வை யிட்டனர்.

உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்ட ஆண்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், 500 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் உடற்திற தேர்வு நடத்தப் பட்டது. இந்த தேர்வில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். உடற்தகுதி தேர்வு முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

தேர்வுக்கான பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் தேர்வு மையத்தில் உரிய கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz