பாஜக அனுமதியுடன் எல்லா மாநிலங்களிலும் ஊழல் - காங். குற்றச்சாட்டு

Monday 17, September 2018, 18:40:53

பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக இன்று தர்மபுரி வந்திருந்த அகில இந்திய பொதுச்செயலாளர், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்  செல்லகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது

"நரேந்திர மோடி பிரதமரானதிற்கு பிறகு பாதுகாப்பு துறையில் 1,72,000 கோடி மெகா ஊழல் நடந்திருக்கிறது. இது பற்றிய காங்கிரஸ் கட்சியின் பகிரங்க குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் தனியாருக்கு ஒப்படைத்ததே. பெட்ரோல், டீசல் விலை விலை குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையில் நான்கு ஆண்டில் 15 இலட்சம் கோடியை மோடி அரசு மக்களிடமிருந்து வரியாக பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஏரி,குளம் தூர்வாரத காரணத்தால், அண்டை மாநிலத்தில் மழை பெய்து  வரும் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியவில்லை. இந்த அரசு விவசாயிகளை கடுமையாக வஞ்சித்து வருகிறது. 

தமிழக அமைச்சர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊழல் செய்து கொள்ள பாஜக அரசு அனுமதித்துள்ளது. நாங்கள் மத்தியில் சூறையாடுகிறோம்.  நீங்கள் மாநிலத்தில் சூறையாடிக் கொள்ளுங்கள் என்பதன் வெளிப்பாடாக இது தெரிகிறது. தமிழகத்திலிருந்து பாஜக தலைவர்களுக்கு மாதந்தோறும் கமிஷன் தொகை வழங்கப்படுகிறது.

இராஜூவ் காந்தி படுகொலையில் கைதாகி சிறையில் உள்ள, சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை  விடுவிக்க, தமிழக அமைச்சரவை, ஆளுநருக்கு  பரிந்துரைத்துள்ளதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது" என்றார்.

அவரிடம்  7 பேரை விடுவிப்பதில் ஆட்சேபணை இல்லை என்றும், அவர்களை மன்னித்துவிட்டோம் என காங்.தலைவர் ராகுல் கூறியிருப்பது பற்றிக் கேட்டதற்கு அது அவரது தனிப்பட்ட கருத்து என்ற மழுப்பலான பதில் வந்தது.

எச்.ராஜா பற்றிய கேள்விக்கு, தகுதியில்லாதவர்களை பற்றி பேச விரும்பவில்லை, அவரை பற்றி பேசுவதை அநாகரீகமாகக் கருதுவதாக செல்லகுமார் கூறினார்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz