பா.ஜ.க. எடுக்கும் முடிவின் அடிப்படையில் இனி தமிழ்நாடு அமையும் - பொன்னார்

Tuesday 18, September 2018, 16:04:18

திருச்சியில் பாஜ அமைப்புசாரா தொழிலார்கள் மாநில மாநாட்டுக் கூட்டம் நேற்று உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மாநிலத் தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

"சென்னையில் செருப்பு வீசிய சம்பவத்துக்கும் பா.ஜவுக்கும் சம்பந்தம் இல்லை. அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் ஜி.எஸ்.டிக்கு கொண்டு வந்ததால்தான் விலை குறைந்திருக்கிறது. அதுபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுக்க அதனை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மாநில அரசுகள் முன்வர வேண்டும். தன் சொந்தத் தொகுதிக்கு கூட ஒன்றும் செய்யாத சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சியின் தோல்வி உறுதி ஆகிவிட்டது"  என்று தமிழிசை பேசினார்.

பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியபோது, "மத்தியில் ஆளும் பா.ஜ.க. தமிழ்நாடு அரசுக்கு மிகப் பெரிய ஆதரவைக் கொடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்தபோது, மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2ம் நிலை பணம் கொடுக்கவில்லை என்றார். இதை பிரதமர் மோடியின் பார்வைக்கு கொண்டு சென்று தற்போது கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.758.6 கோடியும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.631.98 கோடியும் மோடி அரசு வழங்கியுள்ளது.

 திருச்சியில் விரைவில் டிபென்ஸ் காரிடர் அமைய உள்ளது. இதனால், விரைவில் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நகரமாக மாறும். பா.ஜ.க. கூட்டணிக்காக ஏங்கும் கட்சி இல்லை. இனி பா.ஜ.க. எந்த முடிவை எடுக்கிறதோ அந்த முடிவின் அடிப்படையில் தமிழ்நாடு அமையும். 150 ஆண்டுகால காவிரி பிரச்னையை மோடி அரசு மேலாண்மை ஆணையத்தை அமைத்து சுமூகமாகத் தீர்த்து வைத்தது. தமிழகத்திற்கு வரும் தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் செல்கிறது. தமிழ்நாடு அரசுக்குச் சரியான நடவடிக்கையை எடுக்கத் தெரியவில்லை என்பதுதான் இதற்குக் காரணம்"  என்றார்.

விழாவில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வீணையை அமைப்பு சாரா தொழிலாளர்கள் பரிசாக வழங்கினர். மாநிலம் தழுவிய மாநாடு என அழைப்பு விடுத்திருந்தாலும் சில நூறுகளில்தான் கூட்டமிருந்தது எனலாம்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz