ஒகேனக்கல்: சுற்றுலாப் பயணிகளுக்கு நீடிக்கும் தடை

Tuesday 18, September 2018, 16:22:03

இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக அங்குள்ள முக்கிய அணைகள் நிரம்பின. அங்கு மேலும் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலைமையில் உபரி நீரைத் தொடர்ந்து கர்நாடகா வெளியேற்றி வந்தது. கர்நாடகா வெளியேற்றிய உபரி நீரின் தொடர்வரத்துக் காரணமாக ஒகேனக்கலில் நீர் நிரம்பி வெள்ளக்காடாக அது மாறியது.

இதனால் பரிசல் இயக்கம் பல வாரங்களாகத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது. இதனால், பரிசலில் பயணிக்க முடியாது சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அதே போல பொதுமக்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலிகள் பல சேதமடைந்தன. சில வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டன.  

ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு இந்த இரும்பு வேலிகள் இன்றியமையாதவை. எனவே, அவற்றைப் புதுப்பித்து அமைக்கும் முயற்சிகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியது. 25 லட்சம் ரூபாய் செலவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்ட வேலிகளையும், வலுவான தடுப்புச் சுவர்களையும் அமைக்கும் பணி தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. இதற்காக மணல் மூட்டைகள் நீர்வரத்துப் பகுதிகளின் வழியே போடப்பட்டு ஆற்று நீர் திருப்பி விடப்பட்டு பணிகள் நடக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தப் பணி நடந்து வருவதால் ஓகேனக்கல்லின் புகழ்பெற்ற அருவிகளில் குளிக்க முடியாத நிலைமையில் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்கின்றனர். சீரமைப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அது அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒருமித்த எண்ணமாக உள்ளது.  

தர்மபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாஸ்கரன் இது குறித்து நம்மிடம் பேசும்போது, "புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் பலவற்றில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் வசதிக்காக அவர்களது மொழிகளிலும் இங்கு வழிகாட்டிப் பலகைகள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். அதே போல கார் வசதியற்ற நடுத்தர மக்களின் வசதிக்காக மினி பேருந்துகள் ஓகேனக்கல்லின் முக்கியப் பகுதிகளுக்கு  இயக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையினை அரசுக்கு நான் வைத்துள்ளேன். அது நிறைவேற்றப்பட்டால் பொதுமக்கள் பலனடைவார்கள்" என்று தெரிவித்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz