சேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி ?

Wednesday 19, September 2018, 13:20:35

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினராக சேலம் வழக்குரைஞர் அய்யப்பமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது சேலம் வழக்குரைஞர் சங்கச் செயலாளர் பதவியினை வகித்து வரும் இவர் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவிக்கும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த மார்ச் மாதத்தில் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 26 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் மொத்தம் 192 பேர்கள் போட்டியிட்டனர். அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளின்படி, 1697 வாக்குகளுடன், அதிக வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தேடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற சிறப்பினை அய்யப்பமணி பெற்றுள்ளார்.

பார் கவுன்சில் உறுப்பிராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அய்யப்பமணி பார் கவுன்சில் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறார். இப் பதவிக்கு அய்யப்பமணி போட்டியிடுவது சேலம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமியிடம் கேட்டோம். “42 ஆண்டுகளுக்கு முன்பாக பார் கவுன்சில் தலைவராக சேலத்தைச் சேர்ந்த சங்கர முதலியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பின்பு சேலத்தில் இருந்து பார் கவுன்சில் தலைவராக அய்யப்பமணி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. நிச்சயம் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று உறுதியாகக் கூறினார் பொன்னுசாமி.

"சென்னை உயர்நீதிமன்றம் அருகில் வழக்குரைஞர்கள் தங்குவதற்கான விடுதி ஒன்று கட்டப்பட வேண்டும் என்பது வழக்குரைஞர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் வழக்குரைஞர்கள் தங்கும் விடுதியை முதல்வர் உதவியோடு கட்டித் தர உரிய நடவடிக்கைகள் எடுப்பேன். தலைவராகப் பொறுப்பேற்றதும் இதுவே எனது முதல் நடவடிக்கையாக இருக்கும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் அய்யப்பமணி.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz