கரோனா பாதிப்பு காரணமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க காங்கிரஸ் கோரிக்கை

Tuesday 24, March 2020, 01:11:41

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில் அகில இந்திய கிராமத் தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் பெரியசாமி, காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, ஒன்றிய தலைவர் செல்லதுரை, ஒன்றிய முன்னாள் தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் முகக்கவசம் அணிந்து, மணியடித்து கைகளை தட்டியபடி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என கோஷங்கள் முழங்கினர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் வழங்கிய மனுவில், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்களிடம் பயம் கலந்த அச்ச உணர்வு உருவாகி உள்ளது. இதனை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையடைப்பு, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நாளில் தமிழகத்தில் சுமார் 40 சதவீத தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, அவர்களது குடும்பத்துக்கு ஒரு மாதம் கணக்கீட்டு ரூ.15 ஆயிரம் மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்.விவசாயிகளின் வருவாய் இழப்பை தவிர்க்க அவர்களிடமிருந்து நேரடியாக காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும்போது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அனைத்து மக்களுக்கும் உணவு பொருள் தட்டுபாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.வீட்டு வரி, மின் கட்டணம், நில வரி, குடிநீர் வரி, வீட்டு கடன் வட்டி உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

முகவுரை, கிருமி நாசினி மற்றும் ரேஷன் பொருட்கள் ஆகியவை வீட்டுக்கே நேரில் சென்று வழங்க வேண்டும்.24 மணி நேரமும் ஓய்வின்றி உழைக்கும் செய்தியாளர்கள், காவல்துறையினருக்கு தினமும் முழு உடல் கவச உடை, கிருமி நாசினி, முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவைகள் தினமும் வழங்க வேண்டும்.

இதற்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு, பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டும் பெட்ரோலிய இலாக்காவில் இருந்து கரோனா நிவாரண நிதியாக எடுத்து வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz