"50 ஆண்டு  திராவிட ஆட்சியால் தர்மபுரிக்கு பாதிப்பு" - அன்புமணி இராமதாஸ்

Wednesday 19, September 2018, 17:58:55

காவிரி ஆற்றின் உபரி நீரைத் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களுக்குத் திருப்பிவிடக் கோரிப் பொதுமக்களிடம் 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று அவற்றினைத் தமிழக அரசுக்கு அனுப்பும்  இயக்கத்தினை பா.ம.க. தர்மபுரியில் இன்று தொடங்கியது.

தர்மபுரி மக்களவை உறுப்பினர் அன்புமணி இராமதாஸ் இன்று முதல் கையெழுத்தினைப் போட்டு மக்களிடம் கையெழுத்தைப் பெறுகிற இயக்கத்தினைத் தொடங்கி வைத்தார்.

இன்று தர்மபுரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி இராமதாஸ், “ஒகேனக்கலில் இருந்து நீரேற்றும் இயந்திரம் மூலம் நீரைத் தர்மபுரிக்குக் கொண்டுவருவது புதிதான திட்டம் இல்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் இது போன்ற திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

குஜராத் மாநிலத்தில் நர்மதா நதியில் இருந்து ராட்சச பம்பு மூலம் நீர் உறிஞ்சப்பட்டு,  10 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு பாசனம் நடைபெற்று வருகிறது. இங்கு நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிவரை உள்வாங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டிற்கு ஏரி குளங்களுக்கு நீர் நிரப்பினால் அதைக் கொண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பயிர் செய்யலாம்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்திட்டத்தில் நமக்குத தருவதாகச் சொல்லப்பட்ட  நான்கு பங்கு நீரில் தற்பொழுது ஒரு பங்கு நீர்தான் நமக்குக் கிடைத்து வருகிறது. ஒப்பந்த்தில் உள்ள மீதம் மூன்று பங்கு நீரைக்  கொண்டு வருவதில் எந்த பாதகமும் இல்லை.

தர்மபுரி மாவட்டத்தின் மக்கள் தொகை 15 லட்சம்பேர். இதில் 3 லட்சம் இளைஞர்கள் வெளி மாவட்டங்களிலும் வெளிமாநிலங்களிலும் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில்  இதுவரை தர்மபுரி மாவட்டத்திற்கு என்று எந்த ஒரு தொழிற்சாலையும் 50 ஆண்டு கால  திராவிட ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது”  என தெரிவித்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz