ஒரு மாதமாக மூடப்பட்டிருக்கும் முக்கொம்பு சுற்றுலா மையம் திறக்கப்படுமா?

Saturday 22, September 2018, 12:29:07

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் கதவணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு இன்றோடு ஒரு மாதம் ஆகின்றது. கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கதவணையைச் சீரமைக்க நிதி ஒதுக்கித் தீவிர பணிகள் நடந்ததுபோல் காட்டினாலும், முழுமையாக இன்றுவரை தண்ணீர் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்த முடியாமல் பொதுப்பணித் துறையினர் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

காவிரி நதியை வைத்துப் பன்னெடுங்காலமாக அரசியல் செய்யும் அரசியல்வாதிகள், அரசு எந்திரங்கள், நீதிமன்றங்களில் போராடி, போராடி கர்நாடகாவிடம் இருந்து தண்ணீர் வாங்குவது மட்டும் சாதனை என கூட்டங்கள் நடத்தி வந்த போதிலும் காவிரி நீர் கடைமடைவரை சென்று சேராதது வேதனையின் உச்சமாகத்தான் இங்கு இருக்கின்றது.

கடந்த மாதங்களில் கர்நாடகாவில் பெய்த கடும் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூரை வந்தடைந்தது. மேட்டூர் அணையில் கொள்ளளவான 120 அடியை 4 முறை எட்டியதால் உபரி நீர் சுமார் 2 லட்சம் கனஅடிக்கும் மேலாக காவிரியில் அப்படியே திறந்து விடப்பட்டது.

இதனால், கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி இரவு ஆர்ப்பரித்த வெள்ளத்தால் 1836ம் ஆண்டு கட்டப்பட்ட திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் கதவணை மதகுகள் ஆற்றுக்குள் இடிந்து விழுந்தது. இதனால் மொத்தமாக காவிரி நீர் அப்படியே கொள்ளிடம் வழியாக கடலுக்கு சென்று வீணாக கலந்தது.

உடைந்த அணையை கடந்த மாதம் 23-ம் தேதி பார்வையிட்ட தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடைப்பால் பொதுமக்களுக்குப் பெருத்த சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் 4 நாட்களுக்குள் தற்காலிகமாக உடைப்பு சரி செய்யப்பட்டு தண்ணீர் வெளியேறுவது தடுத்து நிறுத்தப்படும் என்றார்.

சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க ரூ.95 லட்சம் ஒதுக்கியும், தற்போது உடைப்பு ஏற்பட்ட அணையின் அருகிலேயே 100 மீட்டர் தூரத்தில் ரூ.410 கோடியில் புதிதாக கதவணை கட்டப்படும் என்றும் கூறிச் சென்றார். இந்த நிலையில் அணை உடைந்து இன்றோடு ஒரு மாதத்தைக் கடந்தும் தண்ணீர் வெளியேறுவதைத் தடுக்க முடியாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

முக்கொம்பு கொள்ளிடம் கதவணையில் உள்ள 9 மதகுகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதற்காக ஆற்றுக்குள் ராட்சத இரும்பு குழாய்கள் மற்றும் நீளமான சவுக்கு கம்பிகளை இறக்கியும், சுமார் 50 அடி தூரம் வரை லாரி லாரியாக பாறாங்கற்களை போட்டும் தண்ணீர் வெளியேறுவது குறைக்கப்பட்டது.

மேலும், 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கி அணையிலிருந்து வெளியேறும் நீரைத் தடுக்கத் தற்காலிக பாதை ஏற்படுத்தப்பட்டு நீரைத் தடுக்கும் பணிகள் இரவு பகலாக நடந்துக்கொண்டிருக்கின்றன.இந்த பணியில் 300-க்கும் மேலான தொழிலாளர் ஈடுபட்டு வந்தாலும் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து இன்னும் தண்ணீர் வீணாக வெளியேறிச் செல்வதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தற்காலிக சீரமைப்பு பணிகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 நாட்களில் இந்த பணி முடிவடைந்து விடும் என்று குறிப்பிட்டார். ஆனால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அவரது பேச்சின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், சரியாக திட்டமிடாததால் தற்காலிக சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தையும், அரசின் மெத்தனப்போக்கையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

அணை சீரமமைப்புப் பணிகள் 95 விழுக்காடு முடிந்துள்ளதாகக் கூறி, இந்தத் தற்காலிகப் பாதை வழியாகத் தற்போது மாணவர்களும், பொதுமக்களும் ஆற்றைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதி தூரம் கடந்து சென்று அணையில் உள்ள ஏணி மூலம் ஆபத்தான முறையில் மாணவர்கள் அடுத்த கரையை கடப்பது ஆபத்தின் உச்சம்.

அணை உடைந்ததால் வாத்தலை பகுதியிலிருந்து திருப்பராய்த்துறை, திருச்செந்தூரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சுமார் 35 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டது. இதனால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

ayyarappan

இதுகுறித்து சமூக ஆர்வலர் அய்யாரப்பன் நம்மிடம் தெரிவிக்கையில், "மேட்டூர் அணையின் உபரி நீர் திறப்பால் மிக நீண்ட கொள்ளிடம் இரும்பு பாலமும், திருச்சியின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் கதவணையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. காவிரி ஆற்றில் நெடுங்காலமாக அடிக்கப்பட்டு வந்த மணல் கொள்ளையே இதற்கு  முதல் காரணம். 

முக்கொம்பு கதவணைப்பகுதியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பதற்காக சில கோடிகளை ஒதுக்கியது அரசு. அந்தத் தொகையை முறையாகப் பயன்படுத்தியிருந்தால் இப்போது அணை உடைந்திருக்காது. டெல்டா மாவட்டங்களில் ஓர் ஆண்டுக்கு விவசாய தேவைக்குப் பயன்படக்கூடிய மொத்த நீரும் கொள்ளிடம் ஆறு வழியாக வீணாக கடலில் கலந்திருக்காது.

கதவணை உடைந்த உடனே முதல்வர் வருகை ஆறுதல் தந்தாலும், அவரின் செயல்பாடுகளில் வீரியம் இல்லாததால் முக்கொம்பின் உடைந்த அணை சீரமைப்பு பணிகள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. 4 நாட்களில் தண்ணீரை அடைத்து விடுவோம் என்றார் முதல்வர், ஆனால், ஒரு மாதத்தை தற்போது கடந்து விட்ட நிலையிலும் தண்ணீர் வீறுகொண்டுதான் போய்க்கொண்டிருக்கின்றது. பாறாங்கற்கள், மணல் மூட்டைகளை தாண்டியும் தண்ணீர் வீணாகிக்கொண்டுதான் இருக்கின்றது.

இது ஒருபுறம் இருக்க, திருச்சி மாவட்டத்தில் உள்ள வெல்லமண்டி நடராஜன், வளர்மதி என 2 மைச்சர்கள் அடிக்கடி முக்கொம்புக்கு உலா வந்து பணிகளை துரிதப்படுத்துவதாக போஸ் கொடுத்தாலும், பணிகளில் திருப்தியில்லை என்பதால் முதல்வர் கரூர் தொகுதிக்குற்பட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் கூடுதலாக கவனிக்க உத்தரவிட்டார்.

முதலில் 700 நபர்களை கொண்டு துவங்கப்பட்ட சீரமைப்பு பணி படிப்படியாக தற்போது 100 நபர்களாக குறைந்து விட்டது. வேலை செய்பவர்களுக்குக் குறைந்த ஊதியம், போதிய பாதுகாப்பின்மை என பல்வேறு குளறுபடிகளால் பலரும் துண்டை உதறிப்போட்டு விட்டு கிளம்பி விட்டனர்.

அணையைச் சீரமைப்பதற்க்காகப் பொதுப்பணித் துறையினர் அணையின் சில மீட்டர் தூரத்திலேயே ஆற்று மண்ணை அடியோடு வறண்டிக் கொண்டிருப்பது மேலும் பேராபத்தை உணர்த்துகின்றது. பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சீரமைப்புப் பணிகள் ஆய்வுக்கு சமீப நாட்களாக வரவில்லை என்பதால் மெத்தனப்போக்கில் பணிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.

இன்னும் சில நாட்களில் பருவமழை தொடங்கி விட்டால் மீண்டும் வெள்ளம் ஏதும் காவிரியில் கரைபுரண்டால் கோடியினை இறைத்து அணையின் தற்காலிகப் பராமரிப்புப் பணிகளுக்காகப் போடப்பட்ட லட்சக்கணக்கான மண் மூட்டைகளும், பாறாங்கற்களும் மீண்டும் நீரோடு அடித்துச்செல்லும் அவலமே ஏற்படும்" என்றார்.

இன்றைய நிலையில் என்ன பணிகள் நடந்துக்கொண்டிருக்கின்றது என்பதை அறிய அணைப்பகுதியில் முகாமிட்டிருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செந்தில்குமார் மற்றும் புகழேந்தியிடம் தொடர்பு கொண்டால் மௌனமே பதிலாகத்தான் கிடைத்தது. ஒரு மாத காலத்திற்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் முக்கொம்பு சுற்றுலா தளத்திற்கு வந்து ஏமாந்து செல்வோர் அதிகம். 

mukkompu park

அதே நேரம், முக்கொம்பில் உள்ள பூங்காக்களில் மணல் முழுவதும் கொட்டப்பட்டிருப்பதால் பூங்காவின் எழில் மறைந்துக் கொண்டே போகின்றது எனலாம். ஒரு மாதத்திற்கு மேலாகியும் உடைந்த கதவணையின் நீரோட்டத்தைத் தடுக்க முடியாமல் திணறும் நிர்வாகத்தை நொந்து கொள்வதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லாமல் என்று வேதனையுடன் பொதுமக்கள் குரல் ஒலிக்கிறது.

க.சண்முகவடிவேல்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz