தாமிரபரணி புஷ்கரம் சிறக்க மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து!

Monday 24, September 2018, 13:17:25

நெல்லை, தூத்துக்குடியில் பாய்ந்து வளம் கொழிக்கும் தென் தமிழகத்தின் ஜீவநதி தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா புஷ்கர விழா வரும் அக்டோபர்11-ம் தேதி துவங்கி 23-ம் தேதி வரை தொடர்ந்து 13 நாட்கள் விமரிசையாக நடக்கிறது. இதற்காக பல்வேறு அமைப்புகள் தாமிரபரணி நதியை சுத்தம் செய்வதிலும், புனரமைப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் தாமிரபரணி ஆற்றில் அக்டோபர் மாதத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால் மஹா புஷ்கரத்திற்கு தடை விதித்தது. பின்னர், நீதிமன்றம் வாயிலாக குறிப்பிட்ட சில இடங்களில் புனித நீராட அனுமதி பெற்று கரையில் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடந்துக்கொண்டிருக்கின்றது.

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 144 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான அருகன்குளம் ஜடாயு தீர்த்தக் கட்டத்தில் நீராடுதல் புனிதமாகக் கருதப்படுவதால் அங்கு புனித நீராட லட்சத்திற்கும் மேலானோர் கூடுவர் என தாமிரபரணி மஹாபுஷ்கர கமிட்டி கருதுகின்றது. இதற்காக அந்த பகுதிகளில் 144 அடி நீளத்தில் ஆற்றின் ஓரமாக புதிய படித்துறை கட்டுமானப் பணியும் நடந்துக்கொண்டிருக்கின்றது.

தாமிரபரணி நதி தீரம் முழுவதும் உள்ள கிராமங்களில் புஷ்கர விழா குழு அமைக்கப்பட்டு தாமிரபரணி நதியைத் தூய்மை செய்தல், சிதிலமடைந்த படித்துறைகள், மண்டபங்களைப் புதுப்பித்தல், ஆக்கிரமிக்கப்பட்ட, திடக்கழிவுகள் கொட்டி தூர்க்கப்பட்ட மதகுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர் அகற்றுதல் போன்ற குடிமராமத்துப்பணிகள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.

இப் பெருவிழாவில் நாடெங்கிலுமிருந்து பல லட்சக்கனக்கான மக்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தாமிரபரணி அன்னைக்கு நன்றி செலுத்துகின்றனர்.

இதனை முன்னிட்டு இயற்கை வள ஆர்வலரும், பசுமைத் தாயக அமைப்பின் புரவலரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ச.இராமதாஸை அவரது தைலாபுரம் இல்லத்தில் சந்தித்த புஷ்கர விழாக் குழுவினர் தாமிரபரணி மஹா புஷ்கர விழா அழைப்பிதழைக் கொடுத்தனர்.

இதற்காக அகில பாரதிய துறவியர்கள் சங்கச் செயலாளரும், தாமிரபரணி மஹா புஷ்கர விழா குழுத் தலைவருமான சுவாமி இராமானந்தா, வேப்பூர் திருநாவுக்கரசர் திருமடம் சிவ தங்கதுரை ஸ்வாமிகள் மற்றும் தென்பாரதக் கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளைக் குழுச் செயலாளர் வி.சத்தியநாராயணன், அகில இந்திய தமிழன்னை அறக்கட்டளை நிருவாகி பழனி மா.தமிழரசன் மற்றும் புஷ்கர விழா குழுவினர் தைலாபுரம் வந்திருந்தனர்.

புஷ்கர விழா அழைப்பிதழை பெற்றுக்கொண்ட மருத்துவர் ச.இராமதாஸ் பசுமைத் தாயகம் வெளியீடான "தாமிரபரணிக்காக" என்ற  நூலினை அவர்களுக்குப் பரிசாக அளித்து புஷ்கரம் விழா சிறப்பாக நடைபெறத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz