Exclusive: தர்மபுரி ஆற்றுப் படுகையில் அள்ளிக் கடத்தப்படும் மணல்!

Monday 24, September 2018, 12:28:01

தென்பெண்ணை ஆறு  தர்மபுரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் முக்கிய பகுதிகளுள் கம்பைநல்லூரும் ஒன்று, கம்பைநல்லூர், கருவேலம்பட்டி ஆற்றுப் படுகையில் மணல் கொள்ளை நடந்து வருவதாக நீண்ட நாட்களாகவே பேச்சுகள் அடிபட்ட வண்ணமிருந்தன. தற்போது அந்த மணல் கொள்ளையின் முழு பரிமாணம் ஆதாரங்களுடன் வெளியாகி அதிர வைத்துள்ளது.  

கருவேலம்பட்டி மணல் கொள்ளையினைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமோ அல்லது காவல்துறையோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் காட்டிய அலட்சியத்தால் மணல்கொள்ளை எந்தவிதத் தொல்லையுமின்றி ஜோராக நடந்து வந்துள்ளது. மணல் கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்தவர்களாக இந்தப் பகுதி பொதுமக்களும் மணல்கொள்ளை பற்றிப் புகார் செய்யவோ, பேசவோ தயக்கம் காட்டுகின்றனர்.

ஆனால், அண்மையில் நம்மைச் சந்தித்துப் பேசிய, தனது அடையாளங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத  கருவேலம்பட்டி பகுதியினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருவேலம்பட்டி மணல் கொள்ளை பற்றி ஆதாரங்களுடன் விவரிக்க, இப்படிக் கூட நடக்குமா? என்று நாம் அதிர்ந்து போய் நின்றோம்.

“சார்.... ஆற்றுப் படுகையினை ஒட்டியுள்ள நிலத்துக்குச் சொந்தக்காரர்களைச் சரிகட்டி விட்டுதான் இந்த அத்துமீறல் நடந்து வருகிறது. அந்தப் பகுதி நிலத்தை நல்ல விலை தந்து குத்தகைக்கு எடுத்திருக்கும் மணல் கொள்ளையர்கள் தங்கள் தொழிலை அங்கு துணிகரமாக நடத்தி வருகின்றனர்.   

வெளிப் பார்வைக்கு ஆற்றுப் படுகைக்குள் வாகனங்கள் போவது சாத்தியமில்லை என்றே தோன்றும். ஆனால், ஆற்றுப் படுகையில் சுமார் நூறு மீட்டர் அளவிற்குப் பிரத்யேகமாக சாலை அமைத்து, ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு வெளிப்படையாகவே மணல் அள்ளப்பட்டுக் கொள்ளையடிக்கப்படுகிறது. ஜே.சி.பி. கொண்டு அள்ளப்படும் மணல் ஆற்றுப் படுகையின் ஒரு ஓரமாகக் குவித்து வைக்கப்படுகிறது.

பின்பு, அங்கு வரும் டிராக்டரில் அந்த மணல் முக்கால்வாசிக்கும் மேலாகக் கொட்டி நிரப்பப்படுகிறது. அதற்கும் மேலாக நொரம்பு எனப்படும் மண்வகை வெளிப்பார்வையில் தெரியும்படி குவிக்கப்படுகிறது.

இந்த டிராக்டர் வெளியே செல்லும்போது அதில் நொரம்பு மண்தான் நிரப்பப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாகவே அனைவரும் நினைப்பர் ஆனால், அதனுள்ளே மணல் இந்த வகையில் நிரப்பப்பட்டு கடத்தப்படுகிறது. இதை பல நாட்கள் கவனித்து எனது செல்போனில் ஜாக்கிரதையாகப் படமும் எடுத்து வைத்திருக்கிறேன்” என்றவர் அந்தப் படங்களை நம்மிடம் காட்டினார்.

“சார்.... இதில் ஒரு வேதனை என்னவென்றால் இந்த அப்பட்டமான கொள்ளை இந்தப் பகுதியினைச் சேர்ந்த எல்லோருக்குமே தெரியும். பொதுமக்களுக்கே வெளிப்படையாகத் தெரியும் இந்த விஷயம், இங்குள்ள காவல்துறை உளவுப்பிரிவு காவலருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.... என்ன காரணத்தினாலோ அவர்களுக்கு இங்கு நடக்கும் மணல் கொல்லையினைத் தடுக்கும் எண்ணம் ஏனோ சிறிதும் இல்லை. அரசு அதிகாரிகளை நம்பித் தகவல் தந்து எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்பதால் உங்களிடம் இது பற்றிக் கூறுகிறேன். எப்படியோ மணல் கொள்ளைத் தடுக்கப்பட்டாக வேண்டும்” என்றார் வேதனையுடன்....

நாம் விசாரித்த வரையில், கடந்த மாதம் மணல் கடத்தலில் ஈடுபட்ட நான்கு லாரிகளை பறிமுதல் செய்யப்பட்டு கம்பை நல்லூர் காவல்நிலையத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இதுவரையில் மூன்று டிப்பர் லாரிகள் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளன. கம்பை நல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவானவை அனைத்துமே பிற மாவட்டங்களில் இருந்து வேறு ஊர்களுக்கு மணலைக் கடத்திய லாரிகள். ஆனால், ஒரு வழக்குக் கூட உள்ளூர் மணல் கடத்தல் பற்றி இல்லாததுதான் வியப்படைய வைக்கிறது.

புல்லுருவிகளும், கருப்பு ஆடுகளும் நிறைந்துள்ள இந்தச் சமூகத்தில் இது போன்ற சட்டவிரோதச் செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற பொதுநல அக்கறையோடு  நம்மைச் சந்தித்துப் பேசிய இளைஞர் தந்த தகவல்களை கம்பைநல்லூர்ப் பகுதியில் உள்ள சிலரிடம் பேசி உறுதி செய்தோம்.

தர்மபுரி சார்ஆட்சியர் சிவனருளைத் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டோம். "நீங்கள் கூறிய இந்தத் தகவல் நேற்று என் கவனத்துக்கும் வந்தது. ஆனால், அந்த இடத்தில் எந்த விதமான வாகனங்களும் செல்ல முடியாத வகையில் ஏற்கனவே குழியினை வெட்டித் தடை செய்துள்ளோம். அனேகமாக இது கருவேலம்பட்டியின் மறுகரையாக இருக்கலாம் என்று ஐயப்பாடு எழுந்துள்ளது. இருப்பினும், இந்தத் தகவலை முழுமையாக சரிபார்க்கச் சொல்லியுள்ளேன். மணல் கடத்தலில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றிக் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்" நம்மிடம் தெரிவித்தார் தர்மபுரி சார்ஆட்சியர் சிவனருள்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz