திருச்சி: முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் நடத்திய விழிப்புணர்வு மராத்தான்

Wednesday 26, September 2018, 13:34:59

அகில இந்திய முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு மராத்தான் போட்டி இன்று காலை திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் துவங்கியது. திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்பணர்வு மராத்தான் தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில், நீதிமன்றம் எம்.ஜி.ஆர் சிலை வழியாக மீண்டும் உழவர் சந்தைக்கே வந்து முடிவுற்றது.

இந்த விழிப்புணர்வு மராத்தான் மூலம், தலைக்கவசம் அணியாதது, செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளில் முகத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், புகையிலை மற்றும் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் நோய் ஏற்பட்டு. முகம் பாதிக்கப்படுவது குறித்தும், பிறவிக் குறைபாடு காரணமாக முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைக் உயர்தர நவீன சிகிச்சை முறைகளால் சீரமைக்க முடியும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் இந்த மராத்தான் போட்டி நடைபெற்றது.

   m3

தமிழ்நாட்டில் திருச்சி தவிர திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இது போன்ற விழிப்புணர்வு மராத்தான் போட்டி இம் மாதம் நடைபெற்றது. மேலும் அடுத்த அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அகில இந்திய முக சீரமைப்பு நிபுணர்கள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கை இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு தொடங்கி வைக்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய மராத்தான் போட்டியை தமிழ்நாடு முக சீரமைப்பு நிபுணர்கள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.வீரபாகு தொடங்கி வைத்தார்.

திருச்சியில் நடைபெற்ற மராத்தான் ஓட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், ப்ரண்ட் லைன், நியூரோ ஒன், ரெத்னா குளோபல், தீபன் நர்சிங் ஹோம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளைச்சேர்ந்த பணியாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு மராத்தான் போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி வாய் நோய், முக, தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் செய்திருந்தது.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz