பெமினா ஷாப்பிங் மாலில் பணம் கையாடிய 2 பேர் மீது வழக்கு பதிய காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணை

Friday 28, September 2018, 11:03:23

திருச்சி சிங்காரத்தோப்பு கோட்டை ஸ்டேஷன் சாலையில், 'பெமினா' ஷாப்பிங் மால் என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் குட்டீஸ்களை குஷிபடுத்தும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அதேபோல் ஆடை விற்பனையகமும் இயங்கி வருகின்றது.

இந்த ஆடைகள் விற்பனை பிரிவில், காசாளராகப் பணியாற்றிய ஸ்டாலின் அருள், கணக்காளராகப் பணியாற்றிய சரண்யா ஆகிய இருவரும் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்து சுமார் 17 லட்சத்திற்கும் மேல் கையாடல் செய்திருப்பது தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. 

போலி ஆவணங்கள் மூலம், சரண்யா, ஸ்டாலின் இருவரும், பணமோசடியில் ஈடுபட்டது தெரிய வர, இதுகுறித்து, நிதிப்பிரிவு அலுவலர் அப்துல்வகாப், மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். ஆனால், நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டாத காவல்துறை பெமினா ஷாப்பிங் மால் அலுவலர்களை இழுத்தடித்தது.

இதையடுத்து, பெமினா மால் சார்பில் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி, புகார் மீது வழக்குப் பதிவு செய்ய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ்க்கு உத்தரவிட்டார். 

காவல்துறையினர் பொதுமக்களை விரட்டி விரட்டி ஹெல்மெட் கேஸ் போடுவதில் தங்கள் வீரப்பிரதாபத்தைக் காட்டுவதை விடுத்து, காவல் நிலையங்களில் தாங்கள்  கொடுக்கும் புகார் மனுக்கள் மீதும் சிறிதளவு அக்கறை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதும் பொதுமக்களின் நியாயமான எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz