மதுக் கடைகளை மீண்டும் திறக்க வலுக்கும் எதிர்ப்பு!

Tuesday 05, May 2020, 22:44:25

சிறப்புக் கட்டுரை:

தமிழகம் முழுவதும் வரும் 7ஆம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. அதே நேரத்தில் அதீதமான கொரோனா தொற்று காரணமாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுபானக் கடைகள்  திருச்சி மாநகரம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலைத் தடுக்கத் தடுப்புகள் அமைப்பதுடன் சமூக இடைவெளியை பின்பற்றி மது வாங்கி செல்லும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மதுக்கடைகள் எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் குடிமகன்களில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் கொரோனாவால்  ஏற்பட்ட நாற்பது நாட்கள் இடைவெளி குடிமகன்களில் சிலரை குடிப்பழக்கத்தையும் மறக்கச் செய்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட பல இடங்களில் அதற்கு பெண்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அவர்களுடன் கொரோனா ஏற்படுத்திய இடைவெளியின் காரணமாகத் திருந்தியுள்ள முன்னாள் குடிமகன்களும் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

அப்படித் திருந்தியவர்களின் முதல் குரலாக திருச்சியினைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளரான செல்வராசுவின் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.  

செல்வராசு மனைவியினை இழந்தவர்; தனது மகன், பிள்ளைகளுடன் தனியே ஒரு வீட்டில் வசித்து வருகிறார். வேலைக்குப் போகும் நாட்களில் கிடைக்கும் ஊதியம் முழுவதையும் பாட்டிலுக்குத்தான் செலவழிப்பார். குடித்தது போக எப்போதும் இரண்டு, மூன்று பாட்டில்களை கால்சராயில் வைத்திருப்பார்.

இரவு வீட்டுக்குமே போகாமல் ஏதாவது கோயில் வாசலில் மிதிவண்டியைக் கீழே போட்டு அதன்மேல் தலையை வைத்து உறங்குவார். அதற்கு முன் போதையில் குறைந்தது ஒருமணி நேரமாவது எதையாவது பாடுவார் அல்லது சம்பந்தமில்லாமல் பேசுவார்..

அதிகாலையில் எழுந்து பையில் இருக்கும் பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கொண்டு டீக்கடைக்குப் போவார். அங்கிருப்பவர்களிடம் எதாவது தகராறு செய்து கொண்டிருப்பார். விடிந்ததும் வேலை, மாலையானால் போதை. இதுதான் இவரது வாடிக்கை. முகச்சவரமெல்லாம் மாதத்துக்கு ஒருமுறைதான்.

இப்படிப்பட்டவர் கொரோனாவால் மதுக்கடைகள் மூடப்பட்ட பிறகு ஆளே அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு மாறிவிட்டார். நிதானமாக, பொதுமுடக்க வேளையிலும் முகச்சவரம் முடித்து ஆளே பளிச்சென்று மாறியிருக்கிறார்.

இவரது மாறுதல் அவரை அறிந்தவர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.யாராவது அவரிடத்தில் “என்ன இவ்வளவு தெளிவு... என்னாச்சு?” என்று கேட்டால் “கிடைக்கலங்க. அதனால குடிக்கல” என்கிறார்.

செல்வராசுவிடம் குடியினை மறப்பது எப்படி உங்களுக்கு சாத்தியமானது? என்று கேட்டோம். ”குடிக்காததால எதுவுமே குடிமுழுகிப் போகல. இப்பதான் நல்லாயிருக்கேன். ஒடம்பு சும்மா கலகலன்னு இருக்கு. நல்லாப் பசிக்குது, ரெண்டு வேளை வயுறு ஃபுல்லா சாப்புடறேன்.

காலைல வெளிக்கு நல்லாப் போவுது. ரெண்டு வேளையும் குளிக்கிறேன். வேலையிருந்தா செய்யுறேன், இல்லைன்னா வீட்டுல படுத்துத் தூங்குறேன். முன்னாடியெல்லாம் கூலிய வாங்கிக் குடிச்சுடறதால வீட்டுக்கு கீத்துக்கூட கட்டமுடியாம இருந்துச்சு.

இப்ப கடை இல்லாததால குடிக்கல. அந்த காசச் சேத்துவைச்சு கீத்து வாங்கி ஆளுவைச்சு வீட்டை சரி பண்ணுனேன். சைக்கிளு ரிப்பேரா இருந்துச்சு. அதையும் ரிப்பேர் பண்ணுனேன். என் மவன் ஒடம்பு சரியில்லாம இருந்தான். அவனுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தேன். இப்பதாங்க வாழ்க்கைன்னா என்னான்னு தெரியுது” என்று முகம் மலரச் சொன்னார் செல்வராஜ்.

அவரிடத்தில் வரும் 7-ம் தேதி முதல் மதுக்கடை திறக்கப்படுகிறது என்று சொன்னதும் மனிதர் அலறி விட்டார்.

“ஐயையோ... டாஸ்மாக்க இப்ப தொறக்க வேணாம்னு சொல்லுங்க. கடையைத் தொறந்தா என்னையப் போல இருக்கிற எல்லாரும் நேரா சுடுகாட்டுக்குத்தான் போவணும். நாப்பது நாளா இந்த பாழாப்போன குடியில்லாம எல்லாரும் நேரா நடக்குறான், வேளாவேளைக்கு சாப்புடறான்.

கை, காலு ஆடாம ஸ்டடியா ஆயிருக்கு. காசு மிச்சமாயிருக்கு. வீட்டுல பொண்டாட்டி, புள்ளையோட சந்தோசமா இருக்கான். கடையில்லாததால குடிக்காம இருந்தோம்.

இப்ப போய்க் கடையத் தொறந்தா எல்லாம் தலைகீழா ஆயிடும். பழையபடி, சம்பாதிக்கிற காசையெல்லாம் கடையில கொண்டு கொட்டிடுவானுங்க. வேணாம் சாமி கடையத் தொறக்க வேணாம் சாமி” என்று கையெடுத்துக் கும்பிட்டார் செல்வராஜ்.

தமிழக அரசும் இதைச் சிந்திக்கட்டும். மூடியது மூடியதாகவே இருக்கட்டும் என்பது நடுநிலைமையாளர்களின் எண்ணமாகவும் உள்ளது.

ஆந்திராவில் மதுபானங்களின் விலையை 50% உயர்த்தி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும்... மக்களிடையே மதுப் பழக்கத்தை குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஆந்திர முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதைத் தமிழகமும் கடைப்பிடித்தால் திருந்திய பல செல்வராசுகளைத் தடுமாறாமல் காப்பாற்ற முடியுமே!

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz