தமிழ்நாட்டில் இளம் வாக்காளர்கள் 25 லட்சம் பேர் - தேர்தல் அதிகாரி தகவல்

Saturday 29, September 2018, 15:09:08

தமிழ்நாட்டில் 19 வயதுடைய வாக்காளர்கள் இளம் வாக்காளர்கள் சுமார் 25 லட்சம்பேர் இருப்பதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா ஷாகு தலைமையில் 9 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் கு.இராசாமணி (திருச்சி), டி.அன்பழகன்(கரூர்), எம்.விஜயலட்சுமி(அரியலூர்), வி.சாந்தா(பெரம்பலூர்), அன்புச்செல்வன்(கடலூர்), அண்ணாதுரை(தஞ்சாவூர்), நிர்மல்ராஜ்(திருவாரூர்), எஸ்.சுரேஷ்குமார்(நாகப்பட்டினம்), ஆசியாமரியம்(நாமக்கல்), திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி ஆணையர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

மண்டல அளவில் நடந்த இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் கட்ட பரிசோதனை, அவற்றின் பாதுகாப்பு குறித்தும், மாவட்டம் தோறும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க கிட்டங்கி கட்டுதல் தொடர்பாகவும், 2019-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்தும், தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும் 18 வயது நிறைவு பெற்று 19 வயது ஆனவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா ஷாகு அறிவுரைகள் வழங்கினார்.

இது பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா ஷாகு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"தமிழ்நாட்டில் 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 18 வயது முதல் 19 வயது வரை இளம் வாக்காளர்கள் சுமார் 25 லட்சம் பேர் உள்ளனர்.

தொடர்ந்து 6 மாதம் ஒரு நபர் ஓர் இடத்தில் வசித்து வந்தால், அவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தகுதியுள்ளவர் ஆவார். அவர் வடமாநிலத்தவராக இருந்தாலும் பெயர் சேர்க்கப்படும். புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு ஜனவரி (2019) 4-வது வாரத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், தேர்தல் ஆணையம் விதிப்படி 6 மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்ததும் உடனடியாக பணிகள் தொடங்கி நடத்தை விதிகளும் அமல்படுத்தப்படும். இடைத்தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் எப்போதும் தயாராகவே உள்ளது.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களும் சரிபார்க்கப்பட்டு தயாராகவே உள்ளன. மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ‘வி.வி.பேட்’ எந்திரமும் தயாராக இருக்கிறது. பாராளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவுக்காக 1 லட்சத்து 69 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்னும் 8 மாவட்டங்களுக்கான எந்திரங்களில் மட்டும் பழுது சரிபார்க்கப்பட வேண்டியது உள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 18 வயது முதல் 19 வயது வயது இளம் வாக்காளர்கள் 25 லட்சம் பேர். 20 முதல் 29 வயது வரை 1 கோடியே 30 லட்சம் பேர், 30 முதல் 39 வயதுவரை 1 கோடியே 32 லட்சம் பேர், 40 முதல் 49 வயதுவரை 1 கோடியே 11 லட்சம் பேர், 50முதல் 59 வயது வரை 84 லட்சம் பேர், 60 முதல் 69 வயது வரை 51 லட்சத்து 82 ஆயிரம் பேர், 70 முதல் 79 வயதுவரை 26 லட்சம் பேர், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 49 ஆயிரம் பேர் இடம் பெற்றுள்ளனர். இது தோராயமான எண்ணிக்கை தான்.

வாக்காளர் அட்டையுடன் இதுவரை 2 கோடி பேரின் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. இடையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த அறிவிப்பு வெளியிட்டதும் மீண்டும் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கி விடும். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் கடுமையாக தடுத்து வருகிறது. இதே நடவடிக்கை தொடரும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதன்போது தமிழக துணை தேர்தல் அதிகாரி ஆனிஜோசப், திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி மற்றும் சிஸ்டம் மேலாளர் அசோக்குமார் உடன் இருந்தனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz