மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற தாசில்தார் விபத்தில் பலி

Saturday 29, September 2018, 13:33:29

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ளது வில்லாரோடை கிராமம். இக் கிராமத்தை ஒட்டியுள்ள கோரையாற்றில் நேற்றிரவு சிலர் லாரிகளில் மணல் கடத்துவதாக விராலிமலை தாசில்தார் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து வருவாய்த் துறை அலுவலர்களுடன் ஜீப்பில் விராலிமலை - கீரனூர் சாலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பூமரம் குளவாய்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடையே சென்றபோது வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்ததில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்த சாலையோர புளியமரத்தில் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த தாசில்தார் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த விராலிமலை போலீசார் அவர்களை மீட்டு இலுப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

adc

மாத்தூர், மணிகண்டம், விராலிமலை காவல் நிலையங்களில் பணியாற்றும் சில போலீஸாரும் – வருவாய் துறையின் சில அதிகாரிகளும் மணல் கொள்ளையர்களுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதாக அப் பகுதி பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மணல் திருட்டைத் தடுக்க சென்ற தாசில்தார் பார்த்திபன் இறந்த சம்பவம் நேர்மையான அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தாசில்தார் பார்த்திபனுடன் கடைசியாகப் பேசிய அனைவரின் செல்பேசிகளையும் ஆய்வு செய்தால் அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் வெளிவரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz