திருச்சி: 1500 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.12 கோடி கொரோனா சிறப்பு கடனுதவி!

Thursday 21, May 2020, 22:27:26

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் Covid -19 சிறப்பு கடன் உதவியாக மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள உறுப்பினர் ஒவ்வொரு நபருக்கும், தலா ரூ.5000 வீதம் அதிகபட்டசமாக ரூ.1,00,000 வரை கடன் உதவி வழங்கும் விழா மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று (21.5.2020) தொடங்கி வைத்து பேசியதாவது:

கொரோனா நோய்த்தொற்று பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படடுள்ளது. இதனால் சாமானியர்கள். நடுத்தர வர்க்கத்தினர் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு கடனுதவி திட்டங்களை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது Covid -19 எனும் கொரோனா சிறப்பு நகைக் கடன் மிகக் குறைந்த வட்டியிலும் (58 பைசா) Covid -19 சுய உதவிக் குழுக்களுக்கான சிறப்பு கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

Covid -19 சிறப்பு நகைக் கடன் திட்டத்தில் கிராம் ஒன்றுக்கு ரூ.3000- வீதம் 7 சதவிகித குறைந்த வட்டி விகிதத்தில் 6 மாத காலத்திற்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 10,0000- வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சுய உதவிக் குழுக்களுக்கு உறுப்பினர் ஒருவருக்கு ரூ.5000- வீதம் அதிகபட்சமாக ரூ.100000 வரை கடன் வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களை விவகார எல்லையாகக் கொண்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 39 கிளைகளும், 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், கரூர் மாவட்டத்தில் 15 கிளைகளும், 84 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் 10 கிளைகளும், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், அரியலூர் மாவட்டத்தில் 9 கிளைகளும், 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் உள்ளன.

covid loan1

வங்கி கிளை அளவில் 4520 குழுக்களும் சங்க அளவில் 16030 குழுக்களும் உள்ளன. இதுவரை தகுதியுள்ள 9586 குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு ரூ.203.09 கோடி கடன் நிலுவையுள்ளது. இதில் Covid -19 கடனுதவிக்கு தகுதியுள்ள குழுக்களாக 1500 குழுக்களுக்கு ரூ.12.00 கோடி கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் வங்கி கிளையளவில் 2660 குழுக்களும், சங்க அளவில் 6190 குழுக்களும் உள்ளது. இதில் ஊழுஏஐனு 19 சிறப்பு கடனுதவிக்கு தகுதியுள்ள குழுக்களுக்கு இன்று 75 குழுக்களுக்கு ரூ. 62.50 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை பொது மக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் யு.சு.காளியப்பன், துணைத்தலைவர் பி.செல்வம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் மு.தனலட்சுமி, திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் கு.ப.வானதி, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் ச.முத்தமிழ்செல்வி மற்றும் வங்கியின் உதவிப்பொது மேலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz