திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Saturday 23, May 2020, 00:46:25
 

தமிழகம் முழுவதும் இன்று தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள போக்குவரத்து பணிமனை முன்பும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பணிமனை முன்பும் போக்குவரத்து தொழிலாளர்கள், தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் மத்திய, மாநில அரசின் சதியை முறியடிக்க அகில இந்திய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளின் நலச்சட்டம் ஆக்காதே, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே, ஆட்டோ, டாக்ஸி, லோடுமேன், இரண்டு சக்கர மெக்கானிக், கட்டுமானப்பணி, தரைக்கடை உள்ளிட்ட முறை சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணமாக மாதத்திற்கு ரூபாய் 7500 வழங்கு, மின்சார சட்டத் திருத்தம் 2020 திரும்ப பெறு, அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கு, மருத்துவமனை, உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் சிஐடியு, ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மு.கருணாநிதி தொமுச தலைமை தாங்கினார். இதில் பெருமாள், ரங்கராஜன், சண்முகம், சச்சிதானந்தம், ராமதாஸ், தினேஷ்குமார், சுரேஷ்குமார், முத்துவேல் மற்றும் அனைத்து தொழிற் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz