பெரியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ உற்சாகம்

Sunday 07, October 2018, 18:40:33

திருச்சி கே.கே.நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளியும், புதிய தலைமுறை தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2018' நிகழ்ச்சியில் 30 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவியர் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்ட அளவிலான இந்த அறிவியல் கண்காட்சி 6 ஆம் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மிக பிரம்மாண்டமான முறையில் நேற்று முன்தினம் 5 ஆம் தேதி காலை 9 மணியளவில் பெரியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. அறிவியல் கண்காட்சி மாவட்டக் கல்வி அலுவலர் திருஞானம் தலைமையில், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் செ.வேலுசாமி மற்றும் பள்ளியின் முதல்வர் க.வனிதா ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இக் கண்காட்சியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 30 பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் புதுமையான படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு படைப்பும், சிந்தனையையும், ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இருந்தன. மேலும் மாணவர்களது மின்காந்த மற்றும் மின்னூட்ட படைப்புகள் அவர்களின் எண்ண அலைகளை நினைவூட்டுபவையாக இருந்தன.

கண்காட்சிக்கு நடுவர்களாக ஜமால் முகமது கல்லூரி உதவிப் பேராசிரியர் ஜாகீர்உசேன் (வேதியியல் துறை), மீராமைதீன்(தாவரவியல் துறை), எபினேசர் (இயற்பியல் துறை), அஸ்லாம்(தாவரவியல் துறை) ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்து பரிசுக்குரியோரைத் தேர்வு செய்தனர்.

pr1

இக் கண்காட்சி எதிர்கால விஞ்ஞானிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஓர் உன்னத முயற்சியாக, மாணவர்களின் படைப்புகளை உலகறியச் செய்யும் விதமாக அமைந்திருந்தது. இம் முயற்சியினை கண்காட்சியில் பங்கேற்க பள்ளிகளின் பொறுப்பாசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளி பொறுப்பாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். மாலை 4 மணியளவில் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி கலை அரங்கில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக இயக்குநர் பேரா.ப.சுப்ரமணியன் தலைமையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி தலைமை மேலாளர் இளையராஜா முன்னிலையில் நடைபெற்றது.

இவ் விழாவில் பள்ளி முதல்வர் க.வனிதா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் வளாக இயக்குநர் ப.சுப்ரமணியன் பேசும் போது, "மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் நல்லதோர் கண்காட்சிக்கு இணைந்து செயல்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தந்தை பெரியாரின் சிந்தனைகளை மாணவர்கள், ஆக்கப் பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி தலைமை மேலாளர் இளையராஜா பேசுகையில், "மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வெளிக்கொணர்வதே புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியின் நோக்கம். மனிதனை மனிதன் நேசிக்கக் கற்று கொடுப்பதே உண்மையான கல்வியாகும்.

தந்தை பெரியாரைப் போன்ற தலைவர்கள் வழியில் புதிய தலைமுறை நிறுவனம் மாணவர்களை அறிவியல் பாதைக்கு கொண்டு சென்று புதிய உலகம் படைக்கும் பணியைத் தொடர்ந்து செய்யும்" என்று கூறினார். கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஜமால் முகமது கல்லூரி உதவி பேராசிரியர்கள் நினைவு பரிசினை வழங்கினர்.

pr4

இக் கண்காட்சியில் இளநிலைப்பிரிவில் மகாத்மா காந்தி சென்டினரி வித்யாலா பள்ளி முதலிடத்தையும், ஹோலி கிராஸ் பெண்கள் மேனிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும், ஓஎப்.டி மேனிலைப்பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றன.

முதுநிலைப்பிரிவில் ஜோசப் காலேஜ் மேனிலைப்பள்ளி முதலிடத்தையும், காஜாமியான் மேனிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும், ஜேம்ஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியில் பள்ளியின் துணை முதல்வர் அருண்பிரசாத் நன்றி கூறினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz