திருச்சியில் நடந்த உயிர் காக்கும் உயர்தர தீவிர சிகிச்சை குறித்த சிறப்பு மருத்துவக் கருத்தரங்கு

Sunday 07, October 2018, 20:04:44

தேசிய அளவிலான அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை குறித்த சிறப்பு மருத்துவ கருத்தரங்கு("EMICON 2018") திருச்சி சங்கம் ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை செய்திருந்தது.

இந்த கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் முனைவர் அ.அமல்ராஜ், திருச்சியின் மூத்த மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு.இராமகிருஷ்ண ஈஸ்வரன், அப்போலோ குழுமத்தின் முதன்மை இயக்க அலுவலர் மரு.ரோகினி ஸ்ரீதர் ஆகியோர் கலந்துக்கொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.

சிறப்பு விருந்தினர் காவல்துறை ஆணையர் முனைவர் அ.அமல்ராஜ், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வியந்ததுடன் மட்டுமல்லாது, திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை அனைத்து விதமான அவசர சிகிச்சைகளையும் கையாள கூடிய மருத்துவர்கள் மற்றும் அதிநவீன அவசர சிகிச்சை பிரிவையும் கொண்டிருப்பதை வெகுவாக பாராட்டினார்.

அது மட்டுமில்லாது மருத்துவர்களுக்கு பயனளிக்க கூடிய இது போன்ற மருத்துவ கருத்தரங்குகளை நடத்துவது குறித்து முயற்சியை பாராட்டியதுடன் மட்டுமல்லாது, மேலும் இது போன்று நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த காவல்துறை ஆணையர் வேண்டுகோள் விடுத்தார்.

மரு. இராமகிருஷ்ண ஈஸ்வரன் மருத்துவத்துறையின் முன்னேற்றங்கள் மற்றும் அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் பங்களிப்பு குறித்து பேசினார்.

அப்போலோ குழுமத்தின் முதன்மை இயக்க அலுவலர் மரு. ரோகிணி ஸ்ரீதர் பேசுகையில், "இந்தியாவில் அவரசர சிகிச்சை போதிய அளவில் மக்களுக்கு கிடைக்காததால் ஓவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். அவசர சிகிச்சைத்துறையில் உரிய தரமான மருத்துவ சேவையின் மூலம் மக்களுக்கு ஏற்படும் உயிர்ச் சேதம் மற்றும் நெடுநாள் மருத்துவமனை அனுமதியை தடுக்க இயலும்.

இத்தகைய உலகத்தர அவசர சிகிச்சையை திருச்சி மருத்துவமனையில் வழங்குவதில் அப்போலோ குழுமம் பெருமை கொள்கிறது. நோயாளிகளுக்கான சேவைமட்டுமின்றி மருத்துவர்களுக்கும் இன்றைய நிகழ்ச்சி போல மருத்துவக்கருத்தரங்கை நடத்துவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்" என்று கூறினார்.

இந்தக் கருத்தரங்கில் திருச்சி அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர் வேல் அரவிந்த், திருச்சி அப்போலோ மருத்துவமனையின் ஈரல் இயல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர் மரு. குமரகுருபரன், சென்னை மியாட் மருத்துமனை இரத்த மாற்று சிகிச்சை நிபுணர் மரு. ஜோஷுவா டேனியல், சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் மரு. எபினேசர் ஆகியோர் அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள முன்னேற்றங்கள் மற்றும் அதிநவீன சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினர்.

இந்த கருத்தரங்கில் இருநூற்றுக்கும் மேலான மருத்துவர்களும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முன்னதாக திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் மருத்துவமனை நிர்வாகி மற்றும் துணை மருத்துவ இயக்குனர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை தீவிர சிகிச்சை நிபுணர் குமார் நன்றியுரையாற்றினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz