திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் நவராத்திரி உற்சாக துவக்கம்

Thursday 11, October 2018, 22:14:43

மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும், அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை. ஆகவே, துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் சக்தி வழிபாடு உள்ளது.

சர்வ சத்ரு உபாதைகளில் இருந்து நீங்கவும், தோஷம் நீங்கி தைரியத்தை கொடுக்கும் துர்காதேவியையும், குபேரன் அருள் வியாபாரம் பெருக, செல்வ செழிப்பில் திளைக்க மகாலட்சுமியையும், இயல், இசை, நாடகம், கல்வி ஆகியவற்றில் சிறக்க 64 கலைகளையும் கற்றுக்கொள்ள சரஸ்வதி தேவியையும் என முப்பெரும் தேவிகளையும் நவராத்திரி விழாவில் வணங்கி வழிபாடு நடத்துவதுண்டு.

s4

நவராத்திரியை முன்னிட்டு திருச்சி சமயபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிகள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் முதல் நாளான நேற்று பகல் 1.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ஸ்ரீரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார்.

பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். இரவு 9.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ஸ்ரீரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவையொட்டி ஆரியபட்டாள் வாசல் அருகே நூறுகால் மண்டபத்தில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைக்கப்பட்டிருந்த சாமி பொம்மைகளை பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் திருநாளான 16-ம் தேதி அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 18-ம் தேதி சரஸ்வதி பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் ஜெயராமன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

tv

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் மட்டுவார் குழலம்மை ஏகாந்த சேவையில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். விழாவையொட்டி மாணிக்க விநாயகர் சன்னதி அருகே நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. விழா வருகிற 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதேபோல திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து அம்மன் ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz