முதல்வர் மீதான ஊழல் வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் தருவோம் - தி.மு.க. அறிவிப்பு

Saturday 13, October 2018, 11:18:18

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக  தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:

"முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஊழல்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பட்டியலிட்டு கூறி, இது தவறு என்றால் என் மீது வழக்கு போடுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எடப்பாடி இதற்கு பதில் கூறாமல் மவுனம் காத்தார். ஒட்டன்சத்திரம், செங்கோட்டை, மதுரை, வண்டலூர் போன்ற நெடுஞ்சாலைக்களுக்கான டெண்டரை எடப்பாடி தனது சம்பந்தி, மாமனாருக்கு முறைகேடாகக் கிடைக்கச் செய்தார்.

இந்த முறைகேடுகள்  குறித்து கடந்த ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையில்  புகாரினைத் தந்து நடவடிக்கை எடுக்கக் கோரினோம். ஆனால், நாங்கள் தந்த புகார் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே, எங்களது புகார்களுக்கு உரிய ஆதாரங்களை இணைத்து கடந்த 28.8.2018 அன்று நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.  

புதியதாகப் போடவுள்ள இந்த சாலைகளுக்கான மதிப்பீட்டை ஆயிரத்து 515 கோடியாக உயர்த்தி தனது சம்பந்தி நிறுவனத்துக்கு அந்த டெண்டராய் எடப்பாடி தந்தார். இதில் மொத்தம் 4 ஆயிரத்து 500 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லையென்று பாலியல் புகாருக்கு உள்ளான ஐஜி முருகன் அறிக்கை தந்தார். உறவினருக்கு தரக்கூடாது என்ற உலக நியதியையும் பின்பற்றவில்லை என்பதால் அரசு தந்த அறிக்கையை ஏற்காமல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை, கவர்னர், ஆட்சி போன்ற எதுவுமே சரியில்லாத நிலையில் தமிழக மக்களைக் காப்பது நீதிமன்றம்தான். நீதிபதியின் தீர்ப்பை ஏற்று எடப்பாடி உடனே முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். நாங்கள் ஏற்கனவே பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் மீது ஊழல் புகார் தந்துள்ளேம். இனியும் தருவோம்.

இனியாவது லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக செயல்பட வேண்டும். . 1350 ரூபாய்க்கு வாங்க வேண்டிய எல்.இ.டி பல்பு 6500லிருந்து 9500 வரைக்கும் வாங்கப்பட்டுள்ளது. இதற்குச் சான்றிதழ் தருவதற்காகவே ஒருவருக்குப் பதவி நீடிப்பும் தரப்பட்டுள்ளது. எனவே, எடப்பாடி பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. 3மாதத்திற்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று  சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அதுவரை பொறுத்து இருப்போம்.

ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, விருதுநகர் சாலைகளைப் பராமரிக்க என்று மட்டுமே  ரூபாய் 2500 கோடியை ஒதுக்கி அதனைத் தனது உறவினர்களுக்கு தந்துள்ளார். நீதிமன்றத்தில்  நாங்கள் இதையெல்லாம் தெரிவித்துள்ளோம். நீதிமன்றம் கேட்டால் எங்களிடமுள்ள கூடுதல் ஆதாரங்களையும் தந்து விசாரணைக்கும் ஒத்துழைப்போம்" ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz