கின்னஸ் சாதனைக்காக மக்களை வேதனைப்படுத்திய சேலம் ஆட்சியர்!

Tuesday 16, October 2018, 17:40:03

கை கழுவது என்பது அன்றாடம் நாம் மேற்கொள்ளும் ஒரு சிறு செயல்தான், ஆனால், அதனை முறையாக மேற்கொள்ளாமல், அது குறித்த விழிப்புணர்வில்லாமல் அலட்சியமாகச் செய்வதனால் பல விதமான நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன. எனவே, கை கழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி, உலக கை கழுவும் தினமாக ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக கை கழுவும் தினத்தினை முன்னிட்டு சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் ஆட்சியர் ரோஹிணி தலைமையில், கின்னஸ் சாதனை முயற்சியாக ஒரே இடத்தில் 4,200 பேர் கை கழுவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 15ந் தேதி நடந்த இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 14ந் தேதி மாலையில் ஆட்சியர் ரோஹிணி பார்வையிடுவதையும் கவர் செய்ய செய்தியாளர்கள் அனைவரும் தனி வாகனங்களில் கண்ணும் கருத்துமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

15ந் தேதி காலையில் 10 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி தொடங்குகிறது என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்திருந்தாலும் காலை ஏழரை மணியில் இருந்தே விழா நடக்கும் கல்லூரி மைதானத்துக்கு தனியார் மேனிலைப் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவியர் தனி வாகனங்களில் பள்ளிச் சீருடையிலேயே அழைத்து வரப்பட்டனர். கல்லூரி மாணவ மாணவியருக்கென தனியே டி-ஷர்ட்டும், தொப்பியும் வழங்கப்பட்டிருந்தது.

கின்னஸ் சாதனைக்குப் பங்கேற்பாளர்களாகத் தேவைப்பட்ட 4,200க்கும் மேற்பட்ட அனைவரையும் மாணவர்களாகவே அழைத்து வந்தால் முழுக்க முழுக்க அது மாணவர்களுக்கான நிகழ்ச்சியாகப் பார்க்கப்பட்டு விடும் என்பதால் அதற்காக வேறு ஒரு ஐடியாவை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் மகாத்மா காந்தி நூறு நாட்கள் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் முதியவர்கள் முதல் இளம்பெண்கள் வரையிலான பெண் பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்றைய தின வேலைக்குப் பதிலாக சேலத்தில் நடக்கும் கை கழுவுதல் நிகழ்ச்சிக்குச் செல்லும்படி வலுக்கட்டாயமாக லாரிகளில் ஏற்றப்பட்டு சேலம் சோனா கல்லூரி மைதானத்துக்கு காலை 7 மணிக்கெல்லாம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரு புறம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இன்னொருபுறம் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பெண் பணியாளர்கள் என்று கல்லூரி மைதானத்துக்குள் கூட்டம் திரளத் தொடங்கியது. அவர்கள் அனைவருக்கும் வரிசைக்கிரமமாக எண்கள் குறிக்கப்பட்ட பேண்டுகள் கைகளில் அணிவிக்கப்பட்டு காத்திருக்கும்படி அமர வைக்கப்பட்டனர். அறிவிக்கப்பட்டிருந்தபடி காலையில் 10மணிக்கெல்லாம் நிகழ்ச்சி தொடங்கப்படாமல் மாவட்ட ஆட்சியரின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்ததது.   

பங்கேற்பாளர்களாக அழைத்து வரப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற எந்த ஒரு வசதியும் செய்து தரப்படவில்லை. மேலும், அந்தப் பெண்களை வெயிலேயே, மண்தரையில் அமர வைத்த அதிகாரிகள் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. பத்து மணிக்கு நிகழ்ச்சி தொடங்குமென அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணியைக் கடந்த பின்னும்  தொடங்கப்படாததால், அவர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களை அழைத்து வந்த அலுவலர்களிடம் குடிநீர், உணவு கேட்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தவிர, காலையில் அழைத்து வரப்பட்ட மாணவ மாணவியர்களும், நிகழ்சிக்கு நடுவராக வந்த நீதிபதிகளும் மாவட்ட ஆட்சியரின் வருகைக்காக பல மணி நேரம் காத்திருந்து, காற்று வசதியற்ற நிலையில், வெயிலில் கடும் அவதிக்குள்ளாகினர். நீண்ட நேரம் காத்திருந்த மாணவிகள் சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இதனை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை, மாவட்ட நிர்வாகத்தினர் செய்தி சேகரிக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மதியம் இரண்டு மணி வரை ஆட்சியர் வராததால், நிகழ்ச்சிக்காக வந்திருந்த நீதிபதிகள் முதல் மாணவ மாணவியர்கள் மற்றும் நூறு நாட்கள் திட்டப் பணியாளர்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து நிகழ்ச்சிக்காக சர்க்கார் கொல்லப்பட்டியில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த பெண் பணியாளர்கள் சிலரிடம் பேசினோம். “காலையில வழக்கம் போல எரி வேலைக்காக வந்த எங்களை இன்னைக்கு சேலத்துல நடக்குற கைகழுவுற நிகழ்ச்சிக்குப் போங்கன்னு சொல்லி லாரியில ஏத்தி அனுப்பி வச்சாங்க. எதுக்காக இங்க வந்திருக்கோம்னே எங்களுக்குத் தெரியாது. டிபன் பாக்ஸ்ல எடுத்து வந்திருந்த மதிய சாப்பாட்தையும் ஏரியிலே வச்சிட்டு வந்திட்டோம். உடனே போயிரலாம்னு கூட்டியாந்தாங்க.... ஆனா, இங்க வெட்டியா எந்த வேலையும் இல்லாம தரையில குந்த வச்சிட்டாங்க. தாகம்னு தண்ணியக் கேட்டாலும் தரல; பசிக்குதுன்னு சாப்பாட்டைக் கேட்டாலும் தரல..... எழுந்து வெளிய போகவும் விடாம ஒக்கார வச்சிருக்காங்க...” என்று அவர்கள் சொல்லியதைக் கேட்கப் பரிதாபமாக இருந்தது.

சேலம் ஆட்சியரைப் பொறுத்தவரை நிகழ்ச்சிக்கு காலதாமதமாக வருவதும், இதனால் அவருக்காக மற்றவர்கள் பல மணி நேரம் காத்திருப்பதும் தொடர் கதையாகவே மாறி வருகிறது. நேற்று நடந்த உலக கை கழுவும் தின கின்னஸ் சாதனை நிகழ்ச்சியும் அதற்கு விதி விலக்கல்ல. ஆட்சியரின் விளம்பரத்திற்காக ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்களையும், முதியவர்களையும் அலைக்கழிப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி 2.30 மணியளவில் வந்த போது, மைதானத்தில் இருந்த மாணவிகள் மற்றும் பணியாளர்கள் பலர் வெளியேறி விட்டனர். குறைந்த அளவு மாணவர்களைக் கொண்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் ரோகினி. இதனிடையே, நிகழ்சிக்கு வந்த மாணவ மாணவியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மதியம் சுமார் 3 மணியளவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தடை செய்யபட்டு உள்ள பிளாஸ்டிக் பைகளில், மாணவ மாணவியர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. குப்பை தொட்டிகள் வைக்கபடாததால், உணவைச் சாப்பிட்டவர்கள் பிளாஸ்டிக் பைகளஆங்காங்கே வீசி சென்றனர். இதன் காரணமாக ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகளும், பாட்டில்களும் சிதறிக் கிடந்தன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைப் புறக்கணிப்போம் என்று மாணவ மாணவியர்களை வைத்து விழிப்புணர்வு பேரணியையும் ஆட்சியர் ரோஹிணிதான் நடத்தினார். இன்று அதே ஆட்சியர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பைகளை அனுமதித்ததற்கு யார் மீது என்ன  நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற நியாயமான கேள்வியை பிளாஸ்டிக் குப்பைகளைச் சுட்டிக் காட்டிய சிலர்  நம்மிடம் எழுப்பினர்.

இந் நிகழ்ச்சியில் மருத்துவர் அசக்ஸ் சாமுவேல் தலைமையில் மருத்துவர் ஆனந்து, மருத்துவர் பிரியதர்சினி ஆகியோர்களும், நடுவர்களான வழக்குரைஞர் திரு.சரவணன், திரு.உதயகுமார், திரு.கோவிந்தராஜ் மற்றும் பட்டயக்கணக்காளர்களான திரு.வெங்கட சுப்ரமணியம், திரு.அருள்செல்வன் உள்ளிட்டவர்கள் கின்னஸ் புத்தகப் பதிவு முயற்சிக்காகப் பங்கேற்றனர்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.நா.அருள்ஜோதி அரசன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.க.பூங்கொடி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலர் திரு.வெ.கண்ணன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz