பொய்வழக்குத் துன்புறுத்தல்: விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ரூ1. 30 கோடி இழப்பீடு!

Thursday 13, August 2020, 02:34:56

இந்திய விண்வெளிக் கழகமான இஸ்ரோவில் திரவ எரிபொருள் தொழில்நுட்பத்துறை விஞ்ஞானியாகப் பணியாற்றியவரும் புகழ்பெற்ற பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்தப் பயன்படும் 'விகாஸ்' ராக்கட் என்ஜினை வடிவமைத்த முன்னோடிகளில் ஒருவருமான விஞ்ஞானி நம்பிநாராயணன் மீது பொய்வழக்குப் போட்டுத் துன்புறுத்தியதற்கு இழப்பீடாக கேரளா அரசு ரூ1. 30 கோடியை வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான விஞ்ஞானி அப்துல்கலாமின் தலைமையில் இஸ்ரோவில் பணிபுரிந்து 2001ல் பணி ஓய்வினைப் பெற்றவர். தமிழ் இலக்கியங்களில் நல்ல பரிச்சயம் உடையவரான இவர் நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழர். 1994ஆம் ஆண்டில் முக்கிய இந்திய ராணுவ ரகசியங்களை மாலத்தீவைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் இருவரிடத்தில் பெருந்தொகையினைப் பெற்றுக் கொண்டு லீக் செய்ததாக அபாண்டமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தது உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானவர்.

இவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த சிபிஐ இவரை குற்றமற்றவர் என்று தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் அவரை 1998ல் விடுதலை செய்தது. 

அதே போல தன்னைப் பொய்யான வழக்கில் நம்பிநாராயணனை குற்றவாளியாகச் சிக்க வைத்தவர்களான அந்த சமயத்தில் டிஐஜியாக இருந்த சிபி மேத்யூ, டிஎஸ்பியாக இருந்த ஜாஷ்வா, சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த விஜயன் ஆகிய மூன்று போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வழக்கினை புலனாய்ந்த சி.பி.ஐ. கேரள அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.

ஆனால், அதனை ஏற்காத கேரள அரசாங்கம் சம்பவம் நடந்து நீண்ட காலமாகி விட்டதால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவையில்லை என்று நடவடிக்கையினைக் கைவிட்டது. கேரள அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து அந்த மூன்று அதிகாரிகள் மீதும் நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்பட வேண்டும் என்று ஒரு வழக்கையும் தற்போது நம்பிநாராயணன் நடத்தி வந்தார்.

கேரள போலீஸ் நம்பிநாராயணன் மீது முதலில் கிளப்பி விட்ட அவதூறை உண்மை என்று நம்பி பத்திரிகைகள் பலவும் அதனை அவர்கள் கூறியவாறே எழுதின. ஆனால் அது பற்றிய உண்மைகள் தெரிய வந்ததும் அந்த நிலைப்பாட்டில் இருந்து தங்களை மாற்றிக் கொண்டு நம்பிநாராயணனுக்கு ஆதரவாக எழுத ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் நம்பிநாராயணன் மீதான கருத்துத் தாக்குதலுக்காக கேரள பத்திரிகைகள் சார்பில் அவரிடம் மன்னிப்பும் கோரப்பட்டது. ஆனால் நம்பிநாராயணனைப் பற்றி மோசமாக எழுதித் தள்ளிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சில தினப் பத்திரிகைகள் உண்மை தெரிய வந்தும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாற்றிக் கொள்ளவோ வருத்தம் தெரிவிக்கவோ அவை முன் வரவேயில்லை என்ற வருத்தம் விஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு நிறையவே உண்டு.

தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டி களங்கமும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியதற்காக கேரள அரசிடமிருந்து ஒரு கோடி ரூபாயினை மானநஷ்ட ஈடாகக் கேட்டு நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 21 வருடங்களாக முடிவுக்கு வராமல் நடந்து வந்த இந்த வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி, வழக்கை, சுமுகமாக முடித்துக் கொள்ள, கேரளஅரசு முடிவு செய்தது.

ஏற்கனவே, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி, நம்பி நாராயணனுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, கேரள அரசு, கடந்த ஆண்டு வழங்கியது. இதை தவிர, தற்போது சிறப்பு அதிகாரி குழு சிபாரிசின் அளித்த அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ1. 30 கோடியை இழப்பீடாக கேரள அரசு தற்போது வழங்கியுள்ளது.

தர்மத்தின் வாழ்வுத|னை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்!

-  வை. கதிரவன்

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz