சிந்து என்ற பெண்ணைப் பலவந்தப்படுத்தி அவருக்குக் குழந்தையினையும் தந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் குற்றசாட்டு அண்மையில் வெடித்துக் கிளம்பியது.. சிந்துவின் குழந்தைக்கு அப்பா ஜெயக்குமார்தான் என்றும், அதற்கு ஆதாரமாக குழந்தையின் பிறப்புச் சான்றிதழும் மற்றும் சிந்துவின் அம்மாவுடன் ஜெயக்குமார் பேசியதாகக் கூறப்படும் சில ஆடியோக்களும் அண்மையில் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
ஆனால், அவை அனைத்தும் போலியாகச் சித்தரிக்கப்பட்டவை என்றும், தன பெயருக்குக் களங்கம் விளைவிக்க மாபியா குடும்பம் செய்த சதி என்றும், விரைவில் இது குறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். இந்த நிலையில் சிந்து தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் மீது மனித உரிமை ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் அவர் மீது எந்த நடவடிக்கையையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் ஜெயக்குமாரை அமைச்சர் பதவியில் இருந்து விலக்கக் கோரியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே நர்மதா என்ற பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். தூண்டிலில் சிக்கிய மீனை ஒரு கையில் தொங்க விட்டுக் கொண்டு, அமைச்சர் ஜெயக்குமாரின் படத்தை கைகளில் ஏந்தி ஒரு மணி நேரமாக நின்றபடி நர்மதாவின் இந்த நூதன போராட்டம் நடந்தது.
தனது போராட்டம் பற்றி நர்மதா செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமைச்சர் ஜெயக்குமார் மீது சமீபத்தில் சிந்து என்ற பெண் பாலியல் குற்றசாட்டு கூறிய நிலையில் அதன் மீது தமிழக முதல்வர் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து காலம் கடத்துகிறார். பாலியல் குற்றசாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர் ஏன் இன்னும் தான் நிரபராதி என நிருபிக்க டி.என்.ஏ சோதனைக்கு முன்வரவில்லை? குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மீது உடனடியாக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; தன் மீதான குற்றசாட்டை நிருபிக்காத நிலையில் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும்” என்றும் கூறினார்.
நர்மதா நடத்திய போராட்டம் பற்றித் தகவலறிந்து வந்த அம்பத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்து அங்கிருந்து அகற்றினர். தனி நபராகப் போராட்டம் நடத்திய நர்மதாவைப் பெண் காவலர்கள் கைது செய்யாமல் ஆண் காவலர்களே கைது செய்துள்ளனர்.
தற்போது கைதாகியுள்ள நர்மதா, ஏற்கனவே ஜீன் 29 தேதி பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் தலையில் பச்சை தலைப்பாகையோடு கையில் நண்டுகளை வைத்துப் போராட்டம் நடத்திச் சிறை சென்றவர் என்பது குறிப்பிடதக்கது.