சிறுமி கொலைக்கு நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு முடிதிருத்தும் தொழிலாளர்கள் அமைதிப் போராட்டம்!

Saturday 10, October 2020, 01:58:39

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முடித்திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்த விபரம் வருமாறு:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடம் குரும்பட்டியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி முடிதிருத்தும் கடை நடத்தும் வெங்கடாசலம், லட்சுமி தம்பதியரின் 12 வயதான மகளை பெற்றோர் வெளியே சென்றிருந்தபோது எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ''மயக்கமடைந்த சிறுமியை மின்சார வயரை மூக்கிலும் வாயிலும் செலுத்தி மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்துள்ளார்.

காவல்துறை விசாரணையில் இதை தனது வாக்கு மூலமாக பதிவு செய்த கிருபானந்தனை, வடமதுரை காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

''இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த செப்டம்பர் 29-ம் தேதி வெளிவந்தது, சாட்சிகள் கலைக்கப்பட்டு கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிபதிகள் விடுதலை செய்தனர். இதனைக்கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 10 லட்சம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அந்தவகையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு திருச்சியில் அமைதிப் போராட்டம் நடந்தது.

ad1

முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக சங்க மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறுமியின் திருவுருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தி அமைதியாக மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டவரை விடுவித்ததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த வழக்கை மத்திய மாநில அரசுகள் மேல்முறையீடு செய்து மறுவிசாரணை நடத்திட வேண்டும். மேலும் சிபிசிஐடிக்கு மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் படத்துடன் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் மௌன அஞ்சலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz