சர்வீஸ் சாலை அமைக்கக் கோரி திமுக எம்.எல்.ஏ தலைமையில் அனைத்துக் கட்சியினர் சாலை மறியல்!

Saturday 10, October 2020, 02:13:41

திருச்சி பால்பண்ணை - துவாக்குடி வரையிலான திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்கக்கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதற்கென சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

இந்தநிலையில் இன்று திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அனைத்துக்கட்சியினர் சார்பில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சர்வீஸ் சாலைக்கான பணிகளை வேகப்படுத்தக்கோரி சாலை மறியல் போராட்டம் திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் எஸ்.ஐ.டி., தொழிற்கல்லூரி அருகே நடத்தினர்.

ma

உயர்நீதிமன்ற உத்தரவின்படி சர்வீஸ் சாலை அமைக்கும் பணி 15.10.19 அன்று முடிந்திருக்க வேண்டும். ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி கூட இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை. இதனை கண்டித்து திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சர்வீஸ் சாலை மீட்பு குழுவினர் திரளாக கலந்து கொண்டு அரியமங்கலம் எஸ்.ஐ.டி, கல்லூரி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசையும், திருச்சி மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல், சர்வீஸ் ரோட்டிற்கான நிலம் கையகப்படுத்தி நிதியை ஒதுக்கி பணியை உடனே துவங்க வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், காங்கிரஸ் கட்சி கோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தனமொழி, சர்வீஸ் கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், பகுதி கழக செயலாளர் இ.எம். தர்மராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடந்தாண்டு சட்டமன்றத் தேர்தலின்போதே சர்வீஸ் சாலை விவகாரம் பூதாகரமாக பேசப்பட்டபோது அதிமுக சார்பில் விரைந்து முடித்து கொடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தபோதும், ஆட்சி முடியும் தருவாய் வரை சர்வீஸ் சாலை பணிக்காக ஆளும் கட்சி நிர்வாகம் பெருத்த முயற்சிகளை எடுக்காதது குறிப்பிடத்தக்கது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz